இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. 

கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் மத்திய அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காலநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் சூழலியல் செயற்பாட்டாளரான ஸ்வீடனைச் சேர்ந்த சிறுமி கிரேட்டா, நேற்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில் இதுகுறித்து கருத்து தெரிவித்த கிரேட்டா, ``கொரோனா பரவல் உள்ள சூழ்நிலையில் இந்தியாவில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வை மாணவர்களை எழுதச் சொல்வது நியாயமற்றது. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரும் கோரிக்கைக்கு நான் உடன்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.  

இந்தியாவில் நடைபெற உள்ள தேர்வை ஒத்தி வைக்கக்கோரும் கிரேட்டாவின் கருத்து இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தமிழகம் சார்பில் திமுக தலைவர் ஸ்டாலினும் தன் எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இதுபற்றி மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்த அவர், அதில் ``தேர்வு எழுத வரும் யாருக்கேனும் வைரஸ் தொற்று இருந்தால், நாடு முழுவதும் மீண்டும் ஒரு தொற்று அலை உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மாணவர்களின் உயிரைப் பணயம் வைத்து எந்தவொரு முடிவும் அவசரகதியில் எடுக்கப்படக் கூடாது. மாணவர்களின் உடல்நலனையும், எதிர்காலத்தையும் அரசு கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும்.
கடும் இடர்ப்பாடுகளின் அடிப்படையில், கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும்வரை ஜே.இ.இ. மற்றும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

காங்கிரஸ் தரப்பிலிருந்தும், கடும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதைத்தொடர்ந்து, அரசின் தொலைக்காட்சியான டிடி நியூஸுக்கு அளித்த பேட்டியில் மத்திய கல்வி அமைச்சர் நிஷாங்க் இதுதொடர்பான அரசு தரப்பு விளக்கத்தை அறிவித்திருக்கிறார். அதில், “ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் ஏன் இன்னும் நடத்தப்படவில்லை என்று பெற்றோர்களும் மாணவர்களும் தொடர்ந்து எங்களிடம் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக மாணவர்கள் மிகவும் கவலையில் உள்ளார்கள். எத்தனை காலம் படித்துக் கொண்டே இருப்பது என்னும் குழப்பத்தில் அவர்கள் உள்ளார்கள்.

ஜேஇஇ தேர்வுகளைப் பொறுத்தவரை 8.58 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்குப் பதிவு செய்துள்ளார்கள். அவர்களில் 7.25 லட்சம் மாணவர்கள் ஏற்கெனவே அட்மிட் கார்டுகளை தரவிறக்கம் செய்துவிட்டனர். 

நாங்கள் மாணவர்களுக்காகத்தான் பணி செய்கிறோம். அவர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதன் பிறகுதான் அவர்களின் கல்வி” என்று கூறியுள்ளார்.

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை எழுத வரும் மாணவர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அவர்கள், முகக்கவசம் மற்றும் கையுரை அணிந்து தேர்வு அறைக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டுமென்றால், புட்டியில் அதைக் கொண்டு வர வேண்டும் என்றும் சானிடைசரையும் எடுத்தவர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தேர்வு மையங்களில், மாணவர்கள் அதிக இடைவெளிவிட்டு, குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்பட உள்ளனர். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு, உடல் வெப்பம் சோதிக்கப்படும். உடல் வெப்பம் அதிகம் இருந்தாலோ, காய்ச்சல் இருந்தாலோ, அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள தனி அறையில்தான் தேர்வை எழுத முடியும்.