உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் வெறிபிடித்த சித்தி ஒருவர் சிறுமியை 15 முறை கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவத்தில் சிறுமியின் தந்தையும் உடந்தையாக இருந்தது சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி என்னும் பகுதியில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

பொறுமையின் சிகரம் பெண் என்பார்கள். தாயின் மறு உருவமாக திகழ்ந்த ஒரு தாயே, சித்தி என்ற ஸ்தானத்தை மறந்து, தன்னுடைய கணவரின் குழந்தையை வெறிபிடித்த மிருகம் போல் கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்திக் கொன்ற சம்பவம் தான், தாய்மையைக் கேள்விக்குறி ஆக்கி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி என்னும் பகுதியில் உள்ள இஷாத் நகரைச் சேர்ந்த 7 வயது சிறுமி, தனது தாய் - தந்தை உடன் வசித்து வந்துள்ளார். இதில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு 5 வயது இருக்கும்போது, சிறுமியின் தாயார் உயிரிழந்த நிலையில், அவரது தந்தை 2 வதாக திருமணம் செய்துகொண்டார்.

சிறுமிக்கு தற்போது 7 வயது ஆகும் நிலையில், தந்தையின் புதிய மனைவியான சித்தியின் கொடுமை வீட்டில் உச்சக் கட்டத்தில் இருந்துள்ளது. சிறுமி வீட்டில் செய்யும் சின்ன குறும்புகளுக்கும், சிறுமியைக் கடுமையாகத் தாக்கி, கொடுமைப் படுத்தி வந்துள்ளார்.

அத்துடன், வீட்டில் உள்ள ஒட்டுமொத்த வேலைகளையும் செய்யச் சொல்லி, அவரது சித்தி கடுமையாக டார்ச்சர் செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று, சிறுமி வீட்டு வேலை எதுவும் செய்ய வில்லை என்று, அவரது சித்தி கடுமையாகத் தாக்கி உள்ளார். சிறுமியை அடித்தும் வெறித் தீராத அந்த கொடூர சித்தி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, சிறுமியின் உடல் முழுவதும் சுமார் 15 முறை கத்தியால் குத்தி, துளிகூட ஈவு இறக்கமின்றி மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.

இதில், சிறுமிக்கு அதிக அளவில் ரத்தம் வெளியேறி பரிதாபமாகச் சிறுமி உயிரிழந்துள்ளார். அப்போது, சிறுமியின் தந்தையும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த விசயம் வெளியே தெரிந்தால், பிரச்சனை என்று நினைத்த சிறுமியின் தந்தையும், சித்தியும் சிறுமியை தங்கள் வீட்டிலேயே புதைத்து உள்ளனர்.

அதே நேரத்தில் சிறுமியை, அவரது சித்தி அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்தும் விசயங்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களாக்கு தெரியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சிறுமியை சில நாட்களாகக் காணவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியின் வீட்டிற்கு வந்து சிறுமியின் தந்தை மற்றும் சித்தியிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

விசாரணையின் போது முதலில், “சிறுமியை தங்களது உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது அவர் மாயமானதாக” சிறுமியின் தந்தை கூறி உள்ளார்.

மேலும், “சிறுமி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாகவும், இதனால் சிறுமியின் உடலை என் வீட்டிலேயே அடக்கம் செய்து விட்டேன்” என்றும், கூறி முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்களது வீட்டில் சிறுமியின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில், “சிறுமியின் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் உள்ள நிலையில், சிறுமியின் உடல் சிதைந்து காணப்பட்டுள்ளது. அத்துடன், சிறுமியின் பல உடல் உறுப்புகள் முற்றிலும் சேதபடுத்தப்பட்டு, அதாவது கடும் சித்திரவதைக்கு உட்படுபத்தி”  கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசா், சிறுமியின் பெற்றோர்களிடம் தங்களது பாணியில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில், “சிறுமியின் தந்தையும், சித்தியம் சிறுமியைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். சிறுமியைத் தடியைக் கொண்டு கொடூரமாகத் தாக்கிய சித்தி, 15 முறை கத்தியால் குத்தி கொன்றதையும் ஒப்புக்கொண்டார். 

இதனையடுத்து, சிறுமியின் தந்தை, சித்தி ஆகிய இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து கைதி செய்தனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தில் சிறுமியின் அத்தை ஒருவரும் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. தற்போது தலைமறைவாக உள்ள அவரை, போலீசார் மிகத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.