உத்தரப் பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு உடல் சிதைக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்புர் கேரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. 

லக்கிம்புர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது கிராமத்தில் இருந்து கடந்த 24 ஆம் தேதி அருகில் உள்ள கிராமத்திற்கு ஸ்காலர்ஷிப் விண்ணப்பிக்கச் சென்று உள்ளார். ஆனால், அதன் பிறகு அந்த சிறுமி வீடு திரும்பி வில்லை.

சிறுமி மாயமானதும், அவரது பெற்றோர் சுற்றுவட்டார கிராமம் முழுவதும் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனால், அங்குள்ள காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து, மாயமான சிறுமியை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், சிறுமியின் கிராமத்தில் இருந்து மிகச் சரியாக 200 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நீர் இல்லாத குளத்தில் சிறுமி சடலமாகக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கிராம மக்கள் சிறுமியின் உடலைப் பார்த்துள்ளனர். அப்போது, சிறுமியின் உடலான கூர்மையான ஆயுதங்களால் மூர்க்கத் தனமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதின் காயங்கள் இருந்தது தெரிய வந்தது. 

மேலும், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டே, கடுமையாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. அது தொடர்பான தடயங்களும் போலீசாருக்கு கிடைத்தன.

இதன் தொடர்ச்சியாக, சிறுமியின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

மேலும், சிறுமியை கொலை செய்யப்பட்டது குறித்து, சிறுமியின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், அவர்களோ, “யார் மீது சந்தேகப்படுவது என்பது தெரியவில்லை” என்று, கூறியுள்ளனர். இது குறித்து போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இதே மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் சிறுமியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்து போவது இது 2 வது முறையாகும். கடந்த 15 ஆம் தேதி அன்று 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அங்குள்ள கரும்பு தோட்டத்தில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 

தற்போது அடுத்த 10 நாட்களில் அதே பகுதியில் மேலும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உடல் சடலமாக எடுக்கப்பட்டுள்ள சம்பவம், அந்த மாவட்ட மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.