ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜகமே தந்திரம். தனுஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார். 

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரகிட ரகிட பாடல் லிரிக் வீடியோவை வெளியிட்டது படக்குழு. தனுஷ் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது இப்பாடல். பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். தனுஷ், தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் படங்களில் வழக்கமாக வரும் சிவப்பு நிற பென்ஸ் கார், இந்த பாடலிலும் வருகிறது. 

லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. தனுஷ் கிடா மீசையில் சுருளி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். பிளாஷ்பாக் காட்சியில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நட்ராஜன் நடித்துள்ளார். படத்தின் விநியோக பங்குதாரராக ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. 

சமீபத்தில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து ஜகமே தந்திரம் திரைப்படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் விளக்கமளித்துள்ளார். அவர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “தியேட்டர்கள் திறக்கப்படும் வரை பொறுமையாக இருக்கவும். வதந்திகளை நம்ப வேண்டாம். ரகிட ரகிட என தனுஷ் பாடுவதை திரையரங்கில் காண ஒட்டு மொத்த குழுவும் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார். இதன்மூலம் ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகாது என்பதை தயாரிப்பாளர் உறுதி செய்துள்ளார்.