“நமது மகள்களில் ஒருவரை காப்பாற்ற நாம் தவறி விட்டோம்” என்று, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஹத்ராஸை சேர்ந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று, பாலிவுட் நடிகர் நடிகைகள் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளனர். 

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான பட்டியலினத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், கடந்த மாதம் 14 ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது, திடீரென்று மாயமானர். மாலை வரை சிறுமி வீடு திரும்பாத நிலையில், அந்த பெண்ணின் பெற்றோர் பல இடங்களில் தேடி உள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் அந்த இளம் பெண் கிடைக்காத நிலையில், மறுநாள் பிற்பகல் நேரத்தில் அந்த பகுதியில் உள்ள சாலையோரம் ரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து, அந்த பகுதியாகச் சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், இது குறித்து அங்கு விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை மீட்டுள்ளனர். 

அப்போது, அவரது உடலின் பல இடங்களில் பலத்த காயங்கள் இருந்துள்ளன. அந்த பெண்ணின் முகத்தின் கண் மற்றும் பிற பாகங்களில் அதிக காயங்கள் இருந்தது தெரிய வந்தது. அந்த இளம் பெண்ணை சிலர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது. பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு அந்த பெண்ணை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு அந்த பெண்ணின் கழுத்தை நெரித்ததில், அவரின் கழுத்து பகுதி பலத்த காயங்கள் இருந்ததும், அந்த பெண் வாய் திறந்து பேசக்கூடாது என்பதற்காக, கொடூரத்தின் உச்சமாக அந்த பெண்ணின் நாக்கு பகுதி அறுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த பெண்ணை மீட்டு அங்குள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அந்த பெண் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதால், அந்த பெண்ணுக்கு உயர் சிகிச்சைக்காக டெல்லி ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் அந்த பெண்ணின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால், அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று உயிரிழந்தார். 

இதனால், இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 4 பேரை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் கொலை வழக்கும் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அந்த இளம் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவத்தை, கடந்த 2012 ஆம் ஆண்டு அரங்கேறிய இளம் பெண் நிர்பயா சம்பவத்தோடு ஒப்பிட்டு, பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். 

குறிப்பாக, இளம் பெண் உயிரிழப்பு காரணமான 4 குற்றவாளிகளையும் தூக்கில் போட வேண்டும் என்று, ஏராளமான பெண்கள் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதன் தொடர்ச்சியாக,  கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஹத்ராஸை சேர்ந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று, பாலிவுட் நடிகைகள் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளனர். 

நடிகர் அக்‌ஷய் குமார்

அதன்படி, பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இந்த சம்பவத்தால் நான் மிகவும் கோபத்துடனும், வெறுப்பாகவும்  இருக்கிறேன். அந்த குற்றவாளிகளை உடனடியாக தூக்கில் போட வேண்டும்”என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

நடிகை கங்கனா ரனாவத்

“பாலியல் கொடூரர்களை பொது மக்கள் முன்னிலையில் சுட்டுத் தள்ளுங்கள். ஆண்டுக்கு ஆண்டு இது போன்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. இதற்கு என்ன தான் தீர்வு? இது போன்ற கொடூரர்களால் இன்று நம் நாட்டிற்கு வருத்தமும், அவமானமான நாள். நமது மகள்களின் ஒருவரைக் காப்பாற்ற நாம் தவறிவிட்டோம்” என்று, தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

நடிகை ரிச்சா சதா

“பாதிக்கப்பட்ட ஹத்ராஸ் இளம் பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். அனைவருக்கும் மரியாதை கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்” என்று, தனது டிவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தி உள்ளார்.

நடிகை ஸ்வரா பாஸ்கர்

தனது ரசிகர் ஒருவர், “ நடிகைகள் ரியா சக்ரவர்த்தி, தீபிகா படுகோணுக்கு செய்திகளில் முக்கியத்துவம் கொடுக்கும் சேனல்கள் இந்த ஹத்ராஸ் பெண்ணுக்கும்  அதே போல் முக்கியத்துவம் கொடுப்பார்களா?” என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, நடிகை ஸ்வரா பாஸ்கர், “கொடுக்க மாட்டார்கள். ஆனால், கொடுக்க வேண்டும்” என்று பதில் அளித்துள்ளார்.

நடிகை யாமி கௌதம்

“என்னுடைய வருத்தம் கோபம் மற்றும் வெறுப்பைத் தெரிவிப்பதற்கு முன்பே என்னுடைய எண்ணங்களை ஒருநிலைப் படுத்துவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது என்றும், இந்த 2020 ஆம் ஆண்டில் நிறைய நிர்பயாக்கள் தங்கள் உயிரை இந்த பாலியல் பலாத்கார போராட்டத்தில் விட்டிருக்கின்றனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குற்றவாளிகளுக்கு உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் டிவிட்டரில் #JusticeForHathrasVictim, #JusticeForManisha, #RIPManishaValmiki போன்ற ஹேஷ்டாக்குகள் டிரண்ட் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.