விவசாய சட்டம் விவசாயிகளுக்கு மரண தண்டனை போன்றது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்றைய தினம் தெரிவித்திருந்தார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன் விவசாயிகள் உள்ளிட்ட பலர்  போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்த போதே 24 ஆண்டு கால கூட்டணி கட்சியாக இருந்த சிரோமணி அகாலிதளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் இந்த மசோதா நிறைவேறியது. இதையடுத்து மத்திய அமைச்சராக இருந்த ஹர்சிம்ராத் கவுர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அக்கட்சியினர் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனிடையே இந்த மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேறியது.

இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது. இதையடுத்து அந்த மசோதா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அவர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறுகையில் விவசாயிகளின் வேதனையையும் பஞ்சாபியர்களின் அழுகுரலையும் கேட்க மறுத்து மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தது வேதனை அளிக்கிறது.

ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழி மசோதா, விவசாய மசோதா உள்ளிட்டவைகளுக்கு ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர் பஞ்சாபியை அலுவல் மொழியாக அங்கீகரிக்க மறுத்துவிட்டார். விவசாய மசோதாக்களுக்கு எதிராக தேசத்தின் ஒருமித்த கருத்தை ஏற்று குடியரசுத் தலைவர் அந்த மசோதாவை திருப்பி அனுப்புவார் என நம்பியிருந்தோம். உண்மையில் ஜனநாயகத்திற்கும் விவசாயிகளுக்கும் இது கருப்பு நாளாகும் என்றார்.

இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் நேற்று கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, ``விவசாய சட்டங்கள், நமது விவசாயிகளுக்கு மரண தண்டனை போன்றது. விவசாயிகளின் குரல் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும்,  வெளியேயும் நசுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

`விவசாய மசோதா புற்றுநோய் போன்றது. சிறிது சிறிதாக விவசாயிகளை விஷம் போன்று கொன்று விடும்' என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விவசாய மசோதாக்களை எதிர்த்து வருகிறது.  எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. விவசாய மசோதாவை எதிர்த்து அரியானா, பஞ்சாப் மாநிலம் கடுமையாக போராட்டம் நடத்தி வருகிறது.

தமிழகத்தில், விவசாய மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இன்றைய தினம் மாநிலம் முழுவது போராட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது. திமுக முன்னெடுத்து இந்த போராட்டத்தை ஒருங்கினைத்து நடத்தியிருந்தது.

இந்நிலையில் திங்கள்கிழமை டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் டிராக்டர் ஒன்றிற்கு தீவைக்கப்பட்டது. இந்நிலையில் உத்தரகாண்டில் நடைபெற்ற  நமாமி கங்கே திட்டத்தின் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் விவசாயிகளை அவமதிப்பதாக தெரிவித்தார்.

விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் எதிர்க்கட்சிகள் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கிய பிரதமர் மோடி, “பல ஆண்டுகளாக அவர்கள் குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்துவார்கள் என்று சொன்னார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை. சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின் படியே இந்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

“விவசாய சட்டங்களுக்கு எதிரான செயல்படும் எதிர்க்கட்சிகள் இடைத்தரகர்களுக்கு ஆதரவானவை. இதன்மூலம் எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்கு எதிரானவை" எனத் தெரிகிறது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது