தமிழகத்தில் 5 ஆம் கட்ட தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், எதற்கெல்லாம் தடை தொடர்கிறது என்பது பற்றி தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் 5 ஆம் கட்ட  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முழு ஊரடங்கு தொடர்ந்த நிலையில், அதன் பிறகு மாத மாத புதிய புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது.

இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பிறகு, பல்வேறு புதிய தளர்வுகளுடன் அக்டோபர் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சிலவற்றுக்கு புதிய தளர்வுகளும், சில வற்றுக்கு அதே தடையும் தொடர்கிறது.

புதிய தளர்வுகள்

- உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. 
 
- உணவகங்களில் இரவு 10 மணி வரை பார்சல் மூலம் உணவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

- நாள் தோறும் வெளிமாநிலங்களிலிருந்து 50 விமானங்கள் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 100 உள்நாட்டு விமானங்கள் வரை அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

- திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளில் உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரே சமயத்தில் 100 நபர்கள் வரை கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

- அரசு, அரசு துறை சார்ந்த பயிற்சி மையங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- ஊரக, நகர பகுதிகளில் வாரச்சந்தைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தொடரும் தடைகள்

- மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 ன் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்கிறது. 

- தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்த விதமான தளர்வுகளுமின்ற ஊரடங்கு முழுமையாக அப்படியே கடை பிடிக்கப்படுகிறது. 

- சுய விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லும் அரசாணை தற்போது நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்படுவதற்கான தடைகள் அப்படியே தொடர்கிறது. 

- திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், பூங்காங்கள், சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றுக்குத் தடை தொடர்கிறது.

- மத்திய அரசு அனுமதித்துள்ள வழித் தடைகளைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்குக்கு முன்பு உள்ள அதே தடையே தற்போதும் நீடிக்கிறது. 

- புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கும் தடை முன்பு போலவே தற்போதும் தொடர்கிறது. 

- மதம் சார்ந்த, சமுதாய, அரசியல், பொழுது போக்கு, ஊர்வலங்கள் நடத்த அதே தடை தற்போதும் நீடிக்கிறது. 

- நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த தளர்வும் கிடையாது என்றும், தமிழக அரசு அறிவித்துள்ளது.

- திருமண விழாக்களிலும், வழிபாட்டுத்தலங்களிலும், இறுதி ஊர்வலங்களிலும் மற்றும் பிற குடும்ப நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கண்டிப்பாக அரசின் வழிமுறைகளை கடைப்பிடித்து நோய்த் தொற்றினை தவிர்க்க வேண்டும் என்றும், தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

மேலும், “பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய்த்தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது தேவைக்கேற்ப மேலும் சில தளர்வுகள் வழங்கப்படும்” என்றும், தமிழக அரசு அறிவித்துள்ளது.