பணமழிப்பழிப்புக்குப் பிறகு 2016 டிசம்பர் மாதம் சேகர் ரெட்டி மற்றும் அவருடைய தொழில் கூட்டாளிகளுக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் 33.89 கோடி ரூபாய் புத்தம் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பழைய நோட்டுகளை, வங்கி அதிகாரிகளின் உதவியுடன் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றியதாகப் புகார் எழுந்தது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சேகர் ரெட்டி, அவரின் உறவினர் சீனிவாச ரெட்டி, பிரேம்குமார் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் பெட்டி, பெட்டியாக புத்தம் புது 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்தச் சோதனை நான்கு நாள்களுக்கும் மேலாக நீடித்தது. முடிவில், ரூ.166 கோடி பணம், 179 கிலோ தங்கம் உட்பட ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. அந்த ஆவணங்களை பெரிய அளவிலான டிராவல் பேக்குகளில் அடைத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். 

இது தொடர்பாக, 198 இடங்களையும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதன் மூலம், மாநில அரசுக்கு 247.13 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறி வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ விசாரணை நடத்திவந்தது. இந்த வழக்கில்தான் முறைகேட்டுக்கான எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி இந்த வழக்கை முடித்துக்கொள்ள சி.பி.ஐ முடிவு செய்தது. இதை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜவஹரும் ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

அந்தவகையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரம் தொடர்பாக அரசுக்கு 247.13 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் 5 பேருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்தது.

சிபிஐ தாக்கல் செய்த இறுதி அறிக்கையின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய சிபிஐக்கு சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதி ஜவஹர் அனுமதி அளித்துள்ளார். “புலனாய்வு விசாரணையின் முடிவில், விசாரணையின் போது பதிவு செய்யப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலத்துடன் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை முடிக்க சிபிசி 173 (2) வது பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
 
குற்றம்சாட்டப்பட்டவர்கள், பெயர் தெரியாத வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுடன் இணைந்து சதி செய்து அரசாங்கத்தை ஏமாற்றினர் என்பதற்கான போதிய ஆதாரங்களை சிபிஐ காண்பிக்கவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. “170 சாட்சிகள் மற்றும் 879 ஆவணங்களின் அறிக்கை அடிப்படையில் கிரிமினல் சதி, மோசடி அல்லது கிரிமினல் முறைகேடு ஆகிய குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை” எனவும் கூறியது.

சேகர் ரெட்டியுடன் இவ்வழக்கில் எம் பிரேம்குமார், கே.சீனிவாசுலு, கே.ரெத்தினம், எஸ்.ராமச்சந்திரன், பரஸ்மல் லோதா ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழகத்தின் எதிர்க்கட்சியான தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேகர்ரெட்டி வழக்கை முடித்துவைத்து அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. அன்பு பரிசு அளித்தது அதிர்ச்சியளிக்கிறது. ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் தலைமையிலான இந்த அரசை பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்றுவது ஏன்?, அ.தி.மு.க. அரசை காப்பதும், சி.பி.ஐ. போன்ற அமைப்புகளில் நடவடிக்கைகளை பிசுபிசுக்க வைப்பதும் ஏன்?

ரூபாய் 2000 நோட்டுகள் சேகர் ரெட்டிக்கு எந்த வங்கியிலிருந்து கொடுக்கப்பட்டது என்பதை சி.பி.ஐ. கண்டுபிடிக்கவில்லை. திருப்பூர் கண்டெய்னரில் பணம் கைப்பற்றப்பட்ட வழக்கையும் சி.பி.ஐ. அம்போவென கைவிட்டது" என்று கூறி, அரசின் மீதும் சி.பி.ஐ.யின் மீதும் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மற்றொரு பக்கம், தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான வழக்கை முடித்துவைத்துவிட்டது சி.பி.ஐ நீதிமன்றம். `அவர் மீதான புகார்களுக்கு எந்தவித ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை' என நீதிபதி தெரிவித்திருக்கும் வார்த்தைகள், அரசியல்ரீதியாக விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.