இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் அறங்காவலர்களின் பெயர், தொழில், முகவரி உள்ளிட்ட விவரங்களை 8 வாரங்களில் வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன், தாக்கல் செய்த மனு விவரம்:  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவ்வாறு நியமிக்கப்படும் அறங்காவலர்களின் பெயர், அவரது தொழில், சுய வருமானம், கோயிலின் பாரம்பரிய நடைமுறைகளின் ஞானம், அரசியல் தலையீடு இல்லாமல் பணியாற்றக் கூடியவரா? என்பது உள்ளிட்ட  விவரங்களை நாளிதழ்களில் பொது அறிவிப்பாக வெளியிட வேண்டும். இந்த விவரங்களை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தெரிவிக்கும் விதமாக விளம்பரப் பலகையிலும் வைக்க  இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எம்.கார்த்திகேயன் பதில்மனு தாக்கல் செய்தார். அதில், "இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சில கோயில் அறங்காவலர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால், அவர்களது குடும்பம் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட முடியாது. மேலும், கோயில் அறங்காவலர் குறித்து குறிப்பிட்ட தகவல்களைப் பெற விரும்புகிறவர்கள் தகவல் உரிமை சட்டம் மூலம் கேட்டுப் பெறலாம்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஸ்ரீதர், கோயில் அறங்காவலர்களின் பெயரை வெளியிடுவது மட்டும் போதாது, கோயில் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க தொடர்பு எண்ணையும் அறிவிக்க வேண்டும் என வாதிட்டார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில் அறங்காவலர்களின் பெயர், முகவரி, தொழில், உள்ளிட்ட விவரங்களுடன் அவர்களது தொடர்பு எண் ஆகியவற்றையும், கோயில் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகளின் விவரங்களையும் கோயில்களின் அறிவிப்புப் பலகையில் 8 வாரங்களில் வெளியிட இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து, கோயில்களின் அறங்காவலர்களின் பெயர், முகவரி, தொழில், அவர்களின் தொடர்பு எண் ஆகியவற்றையும், கோயில் குறித்த புகார்களைத் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகளின் விவரங்களையும் கோயில்களின் அறிவிப்புப் பலகையில் எட்டு வாரங்களில் வெளியிட வேண்டுமென அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

அதேபோன்று, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நியமன உத்தரவு இல்லாமல் பணியில் நீடிக்கும் செயல் அலுவலர்களிடம் இருந்து கோயில் நிர்வாகத்தை அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்கக் கோரிய மற்றொரு மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அறநிலையத் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை நிர்வகிக்க அறநிலையத் துறைச் சட்டத்தின் கீழ் ஆணையர், கூடுதல் ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

அதேபோல, கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை நிர்வகிப்பதற்காகச் செயல் அலுவலர்களை, அறநிலையத் துறை ஆணையர் நியமிக்க, அறநிலையத் துறை சட்டம் வகை செய்கிறது. செயல் அலுவலர்கள் நியமனத்துக்குப் பல்வேறு நடைமுறைகளும் உள்ளன.

ஆனால், பல கோயில்களில் முறையான நியமன உத்தரவு இல்லாமல் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் சட்ட விரோதமாகவும், அறநிலையத் துறை சட்ட விதிகளுக்கு முரணாகவும் பதவியில் நீடித்து வருவதாகவும் கூறி, இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை தலைவர் ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நியமிக்கப்பட்டுள்ள செயல் அலுவலர்களின் பட்டியலை, நியமன உத்தரவுடன் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும், நியமன உத்தரவு இல்லாமல் செயல் அலுவலர்களாக பணியில் நீடிக்கும் செயல் அலுவலர்களிடம் உள்ள கோவில் நிர்வாகத்தை, அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனு குறித்து விளக்கமளிக்க அறநிலையத் துறை செயலாளர் மற்றும் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.