நாடு முழுவதும் காலியாக இருக்கும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இன்று (செப்டம்பர் 29) தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி, சத்தீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகம், நாகாலாந்து, ஒடிசா, உத்தரப்பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

மணிப்பூரில் காலியாக உள்ள இரு சட்டமன்ற தொகுதிகளுக்கும், பீகாரில் காலியாக உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் நவம்பர் 7 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழகத்தில் குடியாத்தம், திருவொற்றியூர், சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், வசந்தகுமார் மறைவு காரணமாக கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் காலியாக இருக்கிறது. குறிப்பாக குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகள் காலியாகி 6 மாதங்கள் நிறைவுபெற்றுவிட்டது. தமிழகம் மட்டுமின்றி, அசாம், கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் காலியாக இருக்கும் சட்டசபை மற்றும் லோக் சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப் போவதில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திமுக எம்எல்ஏக்களாக இருந்த கே.பி.பி.சாமி, காத்தவராயன், ஜெ.அன்பழகன் ஆகியோரின் மறைவால் திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. ஒரு தொகுதி காலியானால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும். இதன்படி, திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளில் ஆகஸ்ட் இறுதிக்குள் தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும்.

இதுகுறித்து கடந்த ஜூலை மாத இறுதியில் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறுகையில், ''தமிழகத்தில் செப்டம்பர் 7 ஆம் தேதி வரை இடைத்தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய 2 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்வது போன்ற பணிகள் தொடங்கிவிட்டன. செப்டம்பர் 7ஆம் தேதிக்குப் பின்னர் எப்போது தேர்தல் தேதியை அறிவித்தாலும் நடத்த தயாராக இருக்கிறோம்'' என்று தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், ``தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களிலும் இடைத் தேர்தல் நடத்துவதில் உள்ள சிரமங்களை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திற்கு மாநில தலைமைச் செயலாளர்கள் கடிதம் எழுதினர். அத்துடன் அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் இந்த மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரவுள்ளது. இதனை ஆராய்ந்து இந்த நிலைமையில் 4 மாநிலங்களிலுள்ள 7 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை நடத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

இதனை வைத்துப் பார்க்கும்போது தற்போதைய சட்டமன்ற பதவிக் காலம் நிறைவுபெறும் வரை எந்த இடைத் தேர்தலும் நடைபெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. எனினும் சமீபத்தில் காலியான கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக இருக்கும் திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தற்போது இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், மற்ற மாநிலங்களில் காலியாக இருக்கும் மொத்தம் 56 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

தேர்தல் நடத்துவதில் தற்போது சிக்கல் இருப்பதாக பல்வேறு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையரிடம் இருந்து மத்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு, குஜராத்தில் 8 தொகுதிகளுக்கு, உத்தரப்பிரதேசத்தில் 7 தொகுதிகளுக்கு, ஜார்கண்ட், நாகலாந்து, கர்நாடகா, மணிப்பூர், நாகலாந்து, ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு தொகுதிகளிலும் நவம்பர் 3ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. முடிவுகள் பீகார் தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து நவம்பர் 10ஆம் தேதி வெளியிடப்படுகிறது.