இளைஞரின் உடலை தீவைத்து எரித்த போலீஸ்.. உ.பி.யில் அதிர வைத்த அதி பயங்கரம்..!

இளைஞரின் உடலை தீவைத்து எரித்த போலீஸ்.. உ.பி.யில் அதிர வைத்த அதி பயங்கரம்..! - Daily news

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர், திடீரென்று உயிரிழந்த நிலையில் அந்த இளைஞனின் உடலை போலீசாரே தீ வைத்து எரித்துள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஃபரூக்காபாத்தை அடுத்து உள்ள பிரமபுரி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞரான கவுதம் என்பவருக்கு, திருமணம் ஆகி இவருக்கு மொத்தம் 3 குழந்தைகள் இருக்கின்றன.

திருமணம் ஆன தலித் இளைஞரான கவுதம், மனைவி, குழந்தைகள் மற்றும் அவரது தாய், சகோதருடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இந்த சூழலில் தான், தலித் இளைஞரான கவுதமை கடந்த 24 ஆம் தேதி வெள்ளிக் கிழமை இரவு 1.30 மணி அளவில் அங்குள்ள மிராபூர் போலீசார் அவரது வீடு புகுந்து, அவரை பயங்கரமாக தாக்கி விட்டு, இழுத்துச் சென்றதாக குற்றம்சாட்டப்படுகிறது.

அதாவது, அந்த நள்ளிரவு நேரத்தில் கவுதம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த போலீசார், அந்த வீட்டில் இருந்த எல்லா பொருட்களையும் தூக்கி வீசி முற்றிலுமாக அவற்றை உடைத்துவிட்டு, அதன் பிறகே கவுதமை மிக கடுமையாக தாக்கி இழுத்துச் சென்ற உள்ளனர்.

இதனையடுத்து, மறு நாள் கவுதமின் உடல் படுகாயங்களுடன் அவரது வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் கிடந்ததாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த கவுதமின் உறவினர்களும், அந்த கிராம மக்களும் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், “போலீசாரின் மிருகத் தனமான கொடூர தாக்குதலில் கவுதமை போலீசார் அடித்தே கொன்று விட்டதாக” குற்றம் சாட்டினர். 

மேலும், அந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன முழக்கங்களை எழுப்பி திடீரென்று போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

இது குறித்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கடந்த 25 ஆம் தேதியான சனிக் கிழமை அன்று உயிரிழந்த கவுதமின் உடலை கை பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். 

பின்னர், கவுதமின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், உடலை வாங் மறுத்த கிராம மக்கள், “சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை, நாங்கள் உடலை வாங்க மாட்டோம்” என்று, விடப்படியாக கூறி உள்ளனர். மேலும், இது தொடர்பாக அந்த கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

குறிப்பாக, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்களை தன்னிடம் தர வேண்டும் என்று கவுதமின் சகோதரர் போலீசாரிடம் கேட்ட நிலையில், போலீசார் அதனை தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், கடும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த கவுதமின் சகோதரர், அந்த காவல் நிலையத்திலேயே தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார்.

இதனால், இன்னும் கோபம் அடைந்த கிராம மக்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டே இருந்து உள்ளனர்.

இதனால், அந்த காவல் நிலைய போலீசாரே, உயிரிழந்த கவுதமின் உடலை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் அனுமதியின்றி வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று எரித்து இறுதிச் சடங்கை நிறைவேற்றி உள்ளதாக, அந்த கிராம மக்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளனர். 

குறிப்பாக, “பிரேதப் பரிசோதனை முடிவில் உயிரிழப்புக்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், ஆனால் கவுதமின் உடலில் தோல்பட்டை, முழங்கை, இடுப்பு உள்ளிட்ட 4 இடங்களில் கடுமையான காயங்கள் இருந்தது தெரிய வந்து உள்ளதாகவும்” அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

அதே நேரத்தில், “உயிரிழந்த கவுதம் மீது திருட்டு, கள்ளச் சாராயம், கடத்தல் உள்ளிட்ட 4 வழக்குகள் இருப்பதாக” போலீசார், குற்றம் சாட்டி உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, “கவுதமின் மரணத்துக்கான காரணத்தை போலீசார் முறைப்படி அறிக்கையாக வெளியிட வேண்டும்” என்று, வலியுறுத்தி உள்ளனர்.

இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ரஸில் 19 வயது தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், அவரது உடலை போலீசாரே எரித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது அதே போன்ற ஒரு மீண்டும் மர்மமான முறையில் உயிரிழந்த தலித் இளைஞனின் உடலை போலீசார் எரித்துள்ள சம்பவம், உத்திரப் பிரதேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் கிளப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment