மதுவிற்காக தாயை தீ வைத்து எரித்த மகனிற்கு ஆயுள் தண்டனை- புதுக்கோட்டை நீதிமன்றம்!

மதுவிற்காக தாயை தீ வைத்து எரித்த மகனிற்கு ஆயுள் தண்டனை- புதுக்கோட்டை நீதிமன்றம்! - Daily news

மது குடிக்க பணம் தராததால் தாயை தீ வைத்து எரித்து கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அதனை 40 ஆண்டு காலம் அனுபவிக்கும் வரை முன்னதாக வெளியில் விடக்கூடாது என புதுக்கோட்டை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே மருதாந்தலை பகுதியை சேர்ந்த துரைராஜின் மனைவி லீலாவதி அவரது வயது 56. இவரது மகன் சந்தோஷ்குமார் வயது 26. இவர், சிப்காட் பகுதியில் சாக்கு நிறுவனத்தில் கூலிவேலை பார்த்து வந்தார். சந்தோஷ்குமார் சிறுவயதாக இருக்கும் போதே அவரது தந்தை வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டார். சகோதரி ஒருவர் திருமணமாகி சென்று விட்டார். இதனால் வீட்டில் தாயும், மகனும் மட்டும் வசித்தனர். இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி அன்று சந்தோஷ்குமார் மது குடிக்கவும், அடமானத்தில் உள்ள மோட்டார் சைக்கிளை மீட்கவும் பணம் தருமாறு தாய் லீலாவதியிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு தாய் லீலாவதி பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

இந்நிலையில்  ஆத்திரம் அடைந்த சந்தோஷ்குமார், தாய் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் இறந்தார். சம்பவத்தன்று தாய் மீது மண்எண்ணெயை ஊற்றி எரித்த போது, சந்தோஷ்குமாருக்கும் சிறிது காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.

அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அப்துல்காதர் நேற்று தீர்ப்பு அளித்தார். இதில் சந்தோஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராத தொகையும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் சந்தோஷ்குமார் 40 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவிக்கும் வேண்டும் எனவும், அதற்கு முன்னதாக தண்டனையை குறைத்து சிறையில் இருந்து விடுவிக்க கூடாது என அரசுக்கு அறிவுறுத்தினார். 

மேலும் தான் செய்த தவறை எண்ணி வருந்துவதற்காக 3 மாத காலம் அவரை தனிமை சிறையில் அடைக்க வேண்டும். இந்த தண்டனையை ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதியில் இருந்து 20-ம் தேதிக்குள் 5 நாட்கள் அனுபவிக்க வேண்டும். இதனை 18 மாதங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சந்தோஷ்குமாரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு குறித்து அரசு தரப்பில் ஆஜராகி வாதாடிய வெங்கடேசன் கூறுகையில், ‘‘பொதுவாக ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது தான். ஆயுள் தண்டனையை 14 ஆண்டுகள் மட்டும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆயுள் தண்டனை கைதிகள் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்திருந்தால் நன்னடத்தை விதிகள், அரசின் சலுகையின் காரணமாக விடுவிக்கப்படுவது உண்டு எனவும் விளக்கினார். 

மேலும் இந்த வழக்கை பொறுத்தவரை பெற்ற தாயை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதோடு, அவர் 40 ஆண்டுகள் தண்டனையை அனுபவிக்கும் வரை அதற்கு முன்பாக அரசின் எந்தவொரு அறிவிப்பு சலுகையால் அவர் வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக தான் இதனை நீதிபதி குறிப்பிட்டு கூறியிருக்கிறார்’’ தெரிவித்தார்.  இந்த வழக்கில் புலன் விசாரணை மேற்கொண்ட அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், ஏட்டு தீபா மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பாராட்டினார்.

Leave a Comment