சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தக்காளி வியாபாரிகளுக்கு கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் தக்காளி வியாபாரிகள் சங்கம் சார்பில் முறையீடு செய்யப்பட்டது.

தென் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் கரணமாக, கர்நடகா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் விளைநிலங்களில் விளைவித்த உணவுப் பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கி அழுகியுள்ளன.

தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் காய்கறிகள் வரத்து குறைந்து கடந்த வாரம் காய்கறிகள் விலை அதிகரித்தது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை , தங்கத்தின் விலைக்கு ஏறியதாக மீம்ஸ்களும் பறந்தன. ஒரு கிலோ தக்காளி விலை 150 முதல் 180 வரையிலும் கூட தமிழகத்தில் விற்று வந்தது.

தக்காளி விலை ஒரேடியாக ஏறியதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தக்காளி இல்லாமல் சட்னி, குழம்பு செய்வது எப்படி என கூகுளில் தேடும் அளவுக்கு போனது. பின்னர் பசுமை பண்ணை கடைகள் மூலமாக 70 முதல் 80 ரூபாய்க்கு தக்காளி விற்கப்படும் என்று தமிழக அரசு தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தது.

இதையடுத்து தக்காளி வரத்து அதிகரித்து தக்காளி விலை தற்போது கிலோ 35 ரூபாய்க்கு குறைந்துள்ளது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் மூடிக்கிடக்கும் தக்காளி கிரவுண்டை திறக்க வேண்டும் என்று தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் தக்காளி கிரவுண்டை திறப்பதன் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளிகளை லாரியில் கொண்டு வந்து இறக்கி, குறைந்த விலையில் மக்களுக்கு தக்காளியை விற்பனை செய்ய முடியும் என்று கூறி வந்தது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், தக்காளி விலை குறையும் வரை பொதுநலன் கருதி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளிகளை கொண்டுவந்து இறக்குவதற்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று மார்க்கெட் கமிட்டி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு நேற்று உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில் இன்று காலை 4 மணி முதல் 4 வாரத்திற்கு தக்காளி லாரிகளை அந்த ஒரு ஏக்கர் நிலத்தில் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவின்படி தக்காளிக்கு ஒரு ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் ஒதுக்கவில்லை என நீதிபதி சுரேஷ்குமார் முன் சங்கம் தரப்பில் வழக்கறிஞர் சிவா ஆஜராகி முறையிட்டார்.

அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இதையடுத்து அதிகாரிகள் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞரையும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரையும் ஆஜராக உத்தரவிட்டார்.