வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் என ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

cyclone

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் பல இடங்களில் வெள்ளநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் வெள்ளநீர் வடியாததால் சாலைகளில் குளம்போல காட்சியளிக்கின்றன. இந்நிலையில் மேலும் இரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் டிசம்பர் 1-ம் தேதி ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல்பகுதியில் திங்கள்கிழமை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில்,  ஒரு நாள் தாமதமாக செவ்வாய்க்கிழமை உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாகவும், பிறகு காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாகவும் அடுத்தடுத்து வலுவடையவுள்ளது. குறிப்பாக, வடக்கு ஆந்திர கடலோரம்-ஒடிஸா இடையே கரையை கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 

மேலும் இந்நிலையில் டிசம்பர் 1-ம் தேதி அரபிக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக் கடலில் டிசம்பர் 1-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. அரபிக் கடலில் குமரி அருகே நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் வங்கக் கடலில் அந்தமான் அருகே மற்றும் அரபிக் கடலில் என ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த பகுதி ஈர்க்கும் நிலை ஏற்பட்டால், தமிழகத்தில் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்.  ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி தெற்கு அந்தமானில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இது புயலாக மாறுமா என்பது அதனுடைய நடவடிக்கைகளை வைத்த கணிக்க முடியும். ஒருவேளை இது புயலாக வலுபெற்றால், அது வடக்கு நோக்கி சென்றுவிடும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கொஞ்சம் வலுவிழந்தால் தமிழ்நாட்டுப் பகுதிகளில் மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.