“ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்ட மசோதாவிற்கு” வாட்டிகன் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து உள்ளது.

பாலியல் உறவில் கடைசியாக உருவானது தான், இந்த ஓரினச் சேர்க்கையாளர் விவகாரம். 

உலகின் சில நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் சட்டமே இயற்றப்பட்டு இருந்தாலும், பல நாடுகளில் அவற்றுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துகொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில் இத்தாலி நாட்டில் தற்போது இந்த பிரச்சனை விஸ்வரூபம்  எடுத்திருக்கிறது.

அதாவது, ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகளுக்கு ஆதரவாக திருநர் ஆதரவாளரும் அந்நாட்டின் அரசியல் தலைவருமான அலெக்சாண்ட்ரோ ஜான் பெயரில், ஜான் சட்ட மசோதா இத்தாலியின் கீழ் அவையில் கடந்த நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டு அப்போதே நிறைவேற்றப்பட்டது. 

தற்போது, இந்த சட்ட மசோதா செனட் சபையில் நிறைவேற்றப்பட வேண்டும். அது தொடர்பான சட்ட ரீதியிலான பணிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அத்துடன், “ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இப்படியான சட்ட மசோதா, அவர்களுக்கு எதிராக யாராவது வன்முறையில் ஈடுபட்டால், பாகுபாடு காட்டினால், இந்த புதிய சட்டத்தின் மூலமாகத் தண்டனை அளிக்க” வகை செய்யப்பட்டு உள்ளது.

இந்த சட்ட சோதாவை நிறைவேற்ற இத்தாலி அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், வாட்டிகன் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தற்போது கிளம்பியிருக்கிறது.

இது குறித்து, கடந்த 17 ஆம் தேதி இத்தாலியின் தூதருக்கு வாட்டிகன் தரப்பில் இருந்து ஒரு முக்கியமான கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த கடிதத்தில், “இத்தாலிக்கும் - வாட்டிகனுக்கும் இடையேயான உறவுகளின் வரலாற்றின் இது வரை இல்லாத செயல்” என்று குறிப்பிட்டு, இந்த மசோதாவுக்கு வாட்டிகன் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து உள்ளது.

அதே போல், “வாட்டிகனை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் கடந்த 1929 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை இந்த மசோதா மீறுவதாக வாட்டிகன் நம்புகிறது” என்றும், அந்த கடிதத்தில் மேற்கொள் காட்டப்பட்டு இருக்கிறது.

“ஓரினச் சேர்க்கையாளர் விவகாரத்தில் கத்தோலிக்கர்கள் தங்கள் கருத்தைத் தெரிவிக்க முடியாத சூழலை உருவாக்கும்” என்றும், வாட்டிகன் தனது தரப்பு வாதத்தையும், கவலையையும் தெரிவித்து உள்ளது.

ஆனாலும், “இந்த ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பு சட்ட மசோதா, யாருடைய மதச் சுதந்திரத்தையும் பாதிக்காது” என்றும், அலெக்சாண்ட்ரோ ஜான் கூறியுள்ளார். இதனால், அந்நாட்டில் இந்த ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பு சட்ட மசோதா பேசும் பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.