உக்ரைனிலிருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை திட்டம்- மா.சுப்பிரமணியம்!

உக்ரைனிலிருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை திட்டம்- மா.சுப்பிரமணியம்! - Daily news

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 9வது நாளாக நீடித்து வருகிறது.  இதில், இரு நாட்டு தரப்பிலும் பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.  அவர்களில் இந்தியர்களும் அடங்குவர்.  மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர். 

இதில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள். மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள 104 மருத்துவ சேவை மையம் சார்பில் உக்ரைன் நாட்டில் இருந்து தமிழகத்துக்கு திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் மாணவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது நிலையை கேட்டறிந்தார். 

அதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: உக்ரைனில் இருந்து இதுவரை மருத்துவம் படித்த 1,456 மாணவர்கள் தமிழகத்துக்கு திரும்பி உள்ளனர். அவர்களுக்கு 104 மருத்துவ சேவை வாயிலாக 2 நாட்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் அவர்களின் தேவை குறித்து கேட்டறியப்படுகிறது. இந்த மாணவர்களின் கல்வி தொடர மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களிடம் பேசுகையில், உக்ரைனைபோல், போலந்து உள்ளிட்ட சிறிய நாடுகளிலும் ஒரே மாதிரியான மருத்துவ பாடத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அங்கு மருத்துவ கல்வியை முடிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

மேலும் அனைத்து தரப்பினருக்கும் தேவையான மருத்துவம் கிடைக்கும் வகையில், சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவது, அவர்களின் உரிமை காப்பது, அரசின் கடமையை செய்வது ஆகியவற்றை முன்னிறுத்தி சுகாதார உரிமைக்கான சட்ட முன்வடிவு விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. இந்த சட்ட முன்வடிவு குறித்து, பொருளாதார வல்லுனர்கள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு முதல்-அமைச்சரின் ஒப்புதல் பெற்று சட்டம் நிறைவேற்றப்படும். இவை நாட்டிலேயே முன்மாதிரி சட்டமாக இருக்கும். தமிழகத்தில் இதுவரை மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 59 லட்சத்து 98 ஆயிரத்து 325 பேர் பயன் அடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி போட்டப்பின், 18 வயது பெண்ணுக்கு கண் பார்வை பாதிப்பு, மற்றொரு சிறுமிக்கு கால் ஊனம் போன்ற தகவல்கள் வந்தப்பின், அவை உடனடியாக மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அளவில் 175 கோடியும், தமிழகத்தில் 10 கோடிக்கு மேல் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. ஒரு சிலவற்றை வைத்து தடுப்பூசி மீது வதந்தி பரப்பக்கூடாது. அந்த 2 பேரும் வேறு சில மருத்துவ காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை, மத்திய, மாநில மருத்துவ குழுக்கள் ஆய்வு நடத்துகிறது. அதன்பின்தான் உண்மை தெரிய வரும்’ என தெரிவித்தார்.
 

Leave a Comment