பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் தற்போது இருந்து வருகிறார்.

பாகிஸ்தான் அணி, தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தான், பாபர் அசாம் மீது அந்நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார். 
  
இந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் கூறும் போது, “பாபர் அசாம் பிரபலமான கிரிக்கெட் வீரராக இல்லாத போதே, எனக்கு அவரை நன்றாகத் தெரியும்” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

குறிப்பாக, “நானும், பாபர் அசாமும் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம் என்றும், கடந்த 2010 ஆம் ஆண்டு பாபர் அசாம், என்னிடம் காதலைத் தெரிவித்தார்” என்றும், கூறியுள்ளார். 

“அப்போது, அவரது காதலை நானும் ஏற்றுக்கொண்டேன்” என்று குறிப்பிட்டுள்ள அந்த இளம் பெண், அதன் பிறகு நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினோம்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், “எங்களின் காதலை அடுத்து நிலைக்கு கொண்டு செல்ல நாங்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தோம் என்றும், அது தொடர்பாக எங்களின் இருவர் குடும்பத்திலும் எங்களது காதல் விசயத்தை கூறினோம் என்றும், ஆனால், அவர்கள் அதற்கு மறுத்து விட்டனர்” என்றும், சுட்டிக்காட்டி உள்ளார். 

“அதன் பிறகு, பாபர் அசாமும் - நானும் நீதிமன்றம் மூலம் திருமணம் செய்ய முடிவு செய்தோம்” என்றும், “அது தொடர்பான முயற்சியில் நாங்கள் இருவரும் ஈடுபட்டோம்” என்றும், அவர் கூறினார்.

இதனையடுத்து, “கடந்த 2011 ஆம் ஆண்டில், காதலன் பாபர் அசாம் என்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்து என்னை பல இடங்களில் வாடகை வீட்டில் அவர் தங்க வைத்து, என்னுடன் தனியாக இருந்தார்” என்றும், தெரிவித்துள்ளார்.

முக்கியமாக, “அந்த நேரத்தில், நான் அவரை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டுக்கொண்டே இருந்தேன்” என்றும், அவர் கூறியுள்ளார்.

“அப்போது, என்னைத் திருமணம் செய்வதாக உறுதியளித்த பாபர், என்னுடன் பல முறை பாலியல் உறவு வைத்து என்னை அவர் கர்ப்பமாக்கினார்” என்றும், பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார். 

“இதில், நான் கர்ப்பமானதும், அதனை வெளியில் சொல்லக்கூடாது என்று என்னை மிரட்டினார் என்றும், ஆனால் இருவரின் வீட்டில் நான் சொல்ல நினைத்த போது அவர் என்னை அடித்து துன்புறுத்தினார்” என்றும், பாதிக்கப்பட்ட இளம் பெண் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். 

“அதன் பிறகு, அவர் என்னிடம் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்திக்கொண்டார்” என்றும், அவர் கவலைத் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், “அவரது நண்பர்களின் உதவியுடன் அவர் என்னை கருக்கலைப்பு செய்தார் என்றும். கடந்த 2017 ஆம் ஆண்டு நான் பாபருக்கு எதிராக நசிராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், “எனக்கு பாபர் அசாமிடம் இருந்து நீதி கிடைக்க வேண்டும்” என்றும் அவர் தற்போது வலியுறுத்தி உள்ளார்.

இந்த குற்றச்சாட்டால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாமுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

இதனிடையே, இளம் பெண் அளித்த இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் தரப்பில் இருந்தோ அல்லது  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தரப்பில் இருந்தோ இது வரை எந்த வித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.