சீனாவில் கடந்த 21-ம் தேதி விபத்துக்குள்ளான போயிங் ரக விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த 21-ம் தேதி சீனவின் குவான்ஸி மாகாணத்தின் குன்மிங் நகரிலிருந்து  குவாங்ஜு நகருக்கு 132 பயணிகளுடன் சீன ஈஸ்டர்ஸ் ஏர்லைன்ஸ் நிறுனத்துக்குச் சொந்தமான எம்யு 5357 என்ற போயிங் 737 விமானம் புறப்பட்டது. குன்மிங் நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டு சென்ற நிலையில் உரிய நேரத்துக்குள் குவாங்ஜு நகருக்கு அந்த விமானம் சென்று சேரவில்லை. இதனையடுத்து விமானத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அந்த விமானத்தை தொடர்புகொள்ள முடியவில்லை. இந்நிலையில், குன்மிங் நகருக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் அந்த விமானம் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. 

இந்நிலையில் விமானம் மோதி விபத்துக்குள்ளான மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வரும் நிலையில், அதன் காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என கூறப்பட்டது. விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் ஊடகங்களில் வெளியானதும் சம்பவம் நடைபெற்ற மலைப்பகுதிக்கு, மீட்பு படையினர், தீயணைப்பு வீரகள், மலையேற்ற குழுவினர் என பல்வேறு மீட்பு குழுவினர் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்ததாகவும் அவர்களின் டி.என்.ஏ. கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் அங்கு விபத்து நடந்த விமானத்தில் உள்ள இரண்டு கருப்பு பெட்டிகளில் ஒரு கருப்பு பெட்டி மட்டும் விபத்து நடந்த இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மற்றொரு கருப்பு பெட்டி மாயமனது. நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் தற்போது இரண்டாவது கருப்பு பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கருப்பு பெட்டியை ஆராய்ந்து பார்த்தால் விமானம் விபத்துக்குள்ளான காரணம் தெரியவரும். இந்த நிலையில் விமானத்தில் இருந்த இரண்டு கருப்பு பெட்டிகளில் ஒரு கருப்பு பெட்டி கடந்த 23-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் விமானத்தின் இரண்டாவது கருப்பு பெட்டி இன்று மீட்கப்பட்டுள்ளதாக ஏ.எவ்.பி  செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கருப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும் விமானிகளின் உரையாடல்கள், விமானத்தின் பதிவுகள் ஆகியவை மூலம் விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய முடியும். இரண்டாவது கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதால் விமான விபத்துக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.