கோவையில் அரசு பள்ளி மாணவிகள் விண்வெளியில் உள்ள குறுங்கோள்களை கண்டுபிடித்ததை நாசா அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.

விண்வெளியில் உள்ள குறுங்கோள்களை கண்டு பிடித்து ஒத்தக்கால்மண்டபம் அரசு பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர். அதை அங்கீகரித்து நாசா சான்றிதழ் வழங்கி உள்ளது. கோவை, திருச்சி மற்றும் தமிழ்நாடு வானியல் அமைப்பு, தமிழ்நாடு அறிவியல் துறை ஆகியவை சார்பில் குறுங்கோள்கள் கண்டறியும் முகாம் நடந்தது. இதில், கோவை ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் பிரமீஷா, சுவேதா ஆகியோர் கடந்த ஜனவரி 28-ந் தேதி முதல் பிப்ரவரி 22-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் கலந்து கொண்டனர்.

இந்நிலையில்  அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அங்கீகரித்து வழங்கிய கணினி செயலி மூலம் 2 குறுங்கோள்களை கண்டறிந்து சாதனை படைத்தனர். இதை நாசா அமைப்பும் அங்கீகரித்து, விஞ்ஞான் பிரசார் மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து குறுங்கோள் கண்டுபிடித்ததற்கான சான்றிதழை கலெக்டர் சமீரனிடம் காண்பித்து மாமணவிகள் பிரமீஷா, சுவேதா ஆகியோர் வாழ்த்து பெற்றனர். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ், அறிவியல் ஆசிரியை சாய்லட்சுமி, ஆசிரியர்கள் மங்கையர் கரசி, நாகராஜ், கீதா ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து மாணவிகள் பிரமீஷா, சுவேதா ஆகியோர் ஏற்கனவே தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள், எதிர்காலத்தில் வானியல் சம்பந்தமான படிப்பு படிக்க உள்ளதாக கூறினர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த பள்ளியில் தொலை நோக்கி வசதி செய்ய ஏற்பாடு செய்வதாக கலெக்டர் சமீரன் உறுதி அளித்தார்.

குறுங்கோள்கள் கண்டுபிடித்தது குறித்து மாணவிகள் மற்றும் வழி காட்டி ஆசிரியர்கள் கூறியதாவது: செவ்வாய்-வியாழன் இடையே சூரிய குடும்பத்தில் சூரியன், 8 கோள்கள் மற்றும் அவற்றின் துணைக்கோள்கள் தவிர இன்னும் பல கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையில் நிறைய பாறை போன்ற பொருட்கள் சூரியனை சுற்றி வரும். இவை ஆஸ்டிராய்டுகள் எனப்படும் குறுங்கோள்களாகும். அவை, பொதுவாக சுமார் 10 மீட்டரில் சிறிய கற்கள் அளவில் இருந்து பெரிய மலை போன்ற அளவிலும் இருக்கும். இவை பூமியின் சுற்றுவட்ட பாதையில் குறுக்கிடும்போது பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைகின்றன. சிறிய அளவில் இருக்கும் கோள்கள் காற்றில் உராய்ந்து தீப்பிடித்து எரிந்து காணாமல் போய் விடுகின்றன. அளவில் பெரிதாக இருக்கும் கோள்கள் பூமியில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

மேலும் கடந்த 1908-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி சைபீரீயாவை பெரிய குறுங்கோள் ஒன்று தாக்கியதால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதன் நினைவாக ஆண்டுதோறும் ஜூன் 30-ம் தேதி குறுங்கோள் தினம் கொண்டாடப்படுகிறது. குறுங்கோள்களுக்கு முதலில் ரோமானிய புராணப் பெயர்கள் தான் வைக்கப்பட்டன. இந்தியாவில் முதலில் கண்டுபிடித்த கோளுக்கு 'ஏசியா' என்று பெயரிடப்பட்டது. தற்போது பெயர் வைக்கும் முறை கைவிடப்பட்டு அதற்கு பதிலாக ஒரு அட்டவணை ஏற்படுத்தி எண் வரிசை தரப்படுகிறது. அதன்படி இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஸெரிஸ் துணைக் கோளுக்கு அட்டவணை எண்- 1 என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதில் மாணவிகள் கண்டுபிடித்த குறுங்கோள்களுக்கு பி.ஜெ.யு.001, பி.ஜெ.யு.002 என்று பெயரிடப்பட்டு உள்ளது.

கோடிக்கணக்கில் உள்ள இந்த குறுங்கோள்களை கண்டறியும் பணிகள் நாசா தலைமையில் தீவிரமாக நடந்து வருகின்றன. குறுங்கோள்களை கண்டுபிடித்தால் அவற்றின் பயண வேகத்தை அறிந்து கொண்டு பூமியை நோக்கி வந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளலாம். குறுங்கோள்களில் உள்ள தாதுப்பொருட்களை கண்டுபிடித்து அவற்றையும் பூமிக்கு கொண்டு வரலாம் என மாணவிகள் தெரிவித்தனர்.