தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், ராட்சசன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக தயாராகி வரும் மோகன்தாஸ் நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது. அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். 

லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் முன்னதாக விஷ்ணு விஷால் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் திரைப்படம் கட்டா குஸ்தி (தெலுங்கில் மட்டி குஸ்தி). 

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க, முனீஸ்காந்த், லிஸ்ஸி ஆண்டனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் RT டீம் வொர்க்ஸ் மற்றும் விஷ்ணு விஷாலின் விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க, ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில், கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார். 

பாரம்பரியமான கட்டா குஸ்தி எனும் குஸ்தி விளையாட்டை மையப்படுத்தி அதிரடியான ஆக்சன் படமாக விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி இருக்கும் கட்டா குஸ்தி திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற டிசம்பர் 2ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் கட்டா குஸ்தி திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த ட்ரெய்லர் இதோ…