தமிழ் சினிமாவின் இன்றியமையாத நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் கவனம் செலுத்தும் விஜய் சேதுபதியின் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

அந்த வகையில் முன்னதாக பாலிவுட்டில் நடிகை கத்ரீனா கைஃப் உடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ் எனும் புதிய ஹிந்தி படத்திலும் மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகியுள்ள மும்பைகர் படத்திலும்  அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து காந்தி டாக்ஸ் எனும் மௌன படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

முன்னதாக,ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஷாஹீத் கபூர் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள ஃபர்ஸி வெப்சீரிஸ் விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது. இந்த வரிசையில் விஜய் சேதுபதி நடிப்பில் மலையாளத்தில் தயாராகியுள்ள திரைப்படம் 19(1)(a). 

அறிமுக இயக்குனர் இந்து.VS இயக்கத்தில் 19(1)(a) திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நித்யாமேனன், இந்திரஜித் சுகுமாரன், இந்தரன்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரிப்பில் உருவாகியிருக்கும் 19(1)(a) திரைப்படத்திற்கு மகேஷ் மாதவன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

வருகிற ஜூலை 29-ம் தேதி 19 (1)(a) திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் 19(1)(a) திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள விஜய்சேதுபதியின் 19(1)(a) பட ட்ரைலர் இதோ…