தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் பீஸட். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள பீஸட் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று பீஸட் படத்தின் முதல் பாடலாக அரபிக் குத்து பாடல் வெளியாகயுள்ளது.

இதனையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய், தளபதி66 படத்தில் நடிக்க உள்ளார்.  முன்னதாக தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜயின் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு பல இடங்களில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரையும் சமீபத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் தளபதி விஜய்.

இதனிடையே தமிழகத்திற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவுப்புகள் வெளியானது. தொடர்ந்து அனைத்துக் கட்சியினரும் தேர்தலுக்கு தயாராகி வந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினரும் போட்டியிடுவதை உறுதி செய்தனர். இந்நிலையில் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிக்கை விஜய் தரப்பிலிருந்து வெளியானது. பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அந்த அறிக்கையில், 

தமிழ்நாட்டில் நடைபெறும் 2022-ஆம் ஆண்டின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் "தளபதி" அவர்களின் உத்தரவின்படி "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" எந்த கட்சியுடனும் கூட்டணியோ, ஆதரவோ இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது. எனவே தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக அனைத்து மாவட்ட தலைவர்களும், அணி தலைவர்களும், ஒன்றிய, நகர, பகுதி தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், ரசிகர்களும் முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்து, "தளபதி" மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக செய்த நற்பணிகளை, மக்களிடத்தில் கொண்டு சேர்த்து நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றியை போலவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் கணிசமான வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.