தெலுங்கு சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்திற்குப் பிறகு இந்திய அளவில் மிக பிரபலம் அடைந்தார். அந்த வகையில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் வரிசையாக தயாராகி வருகின்றன.

தற்போது சமந்தாவுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் விஜய் தேவரகொண்டா அடுத்ததாக, இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் JGM ஜனகணமன திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். முன்னதாக முதல் முறை இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா நடித்த திரைப்படம் லைகர்.

குத்து சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் படத்தில், கதாநாயகியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, லைகர் திரைப்படத்தின் மிரட்டலான முக்கிய கதாபாத்திரத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் நடித்துள்ளார். 

விஷ்ணு சர்மா ஒளிப்பதிவில்  லைகர் திரைப்படத்தின் பாடல்களுக்கு தனிஷ்க் பக்ச்சி இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் மணிஷர்மா பின்னணி இசை சேர்க்கிறார்.லைகர் திரைப்படத்தை நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகநாத் அவர்களின் பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க,யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்குகிறது. 

லைகர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் லைகர் திரைப்படத்திலிருந்து அடுத்த பாடலாக ஆஃபட் எனும் ரொமான்டிக்கான பாடல் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலின் ப்ரோமோ நாளை ஆகஸ்ட் 4ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.