தமிழ் திரையுலக ரசிகர்களின் ஃபேவரட் இசையமைப்பாளராக திகழும்  இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிகராகவும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் காக்கி, தமிழரசன், அக்னிசிறகுகள் ஆகிய திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார். மேலும் இயக்குனர் & ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்துள்ள விஜய் ஆண்டனி, இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் கொலை ஆகிய படங்களும் அடுத்தடுத்து வெளிவரவுள்ளன.

மேலும் தமிழ் படம் படத்தின் இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் ரத்தம் திரைப்படத்திலும் நடித்து வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து தயாரகிவரும் திரைப்படம் வள்ளி மயில். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் வள்ளி மயில் படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து சத்யராஜ் மற்றும் இயக்குனர் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் ஃபரியா அப்துல்லா, தெலுங்கு நடிகர் சுனில், ரெட்டின் கிங்ஸ்லி மற்றும் யூட்யூப் பிரபலமான GP.முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நல்லுசாமி பிக்சர்ஸ் மற்றும் தாய் சரவணன் இணைந்து வழங்கும் வள்ளி மயில் படத்திற்கு D.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் வள்ளி மயில் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.