“இந்து மதத்தை விட்டு வெளியேறிவர்களை மீண்டும் மதமாற்ற வேண்டும்” என்று, பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஸ்ரீ கிருஷ்ண மடத்தின் சார்பாக நடத்தப்பட்ட விஸ்வர்பணம் என்னும் ‘தர்ம சன்சத்’ நிகழ்ச்சியானது கடந்த 25 ஆம் தேதி சனிக் கிழமை அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, “இந்து மதத்தை விட்டு வெளியேறிய அனைவரையும் மீண்டும் மதம் மாற்றுவது மட்டுமே இந்துக்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி என்றும், அதில் பாகிஸ்தானின் இஸ்லாமியர்களும் அடங்குவார்கள்” என்றும், வெளிப்படையாகவே பேசி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.

அதாவது, ஸ்ரீ கிருஷ்ண மடத்தின் விழாவில் பேசிய தேஜஸ்வி சூர்யா, “இந்து மதத்தை விட்டு வெளியேறிய அனைவரையும் மீண்டும் மதம் மாற்றுவது மட்டுமே இந்துக்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி” என்று, முதலில் குறிப்பிட்டார். 

அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து பேசிய அவர், “வரலாற்றின் போக்கில் சமூக, அரசியல், பொருளாதார காரணங்களுக்காக இம்மதத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானவர்கள், மீண்டும் தாய் மதத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும், மக்களை இந்து மதத்திற்கு திரும்பக் கொண்டுவர ஒவ்வொரு கோயிலும், ஒவ்வொரு மடமும் ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயிக்க வேண்டும்” என்றும், தனது திட்டம் குறித்து அவர் தெளிவுப்பட கூறினார்.

இந்த ஹரித்வார் தர்ம சன்சத் நிகழ்ச்சியானது, யதி நரசிம்மானந்த் கிரி என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

இவர், கடந்த காலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களை பேசியதாகவும், வன்முறையைத் தூண்டியதாகவும் இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. 

இந்த நிகழ்ச்சியில் பேசப்பட்ட பேச்சுக்கள் எல்லாம் இணையத்தில் வீடியோவாக வெளியாகி, பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, “பிற மதத்தின் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களைக் கொல்ல அழைப்பு விடுத்து, பல பேச்சாளர்கள் வெறுப்பு பேச்சுக்களை பேசியது தொடர்பாக” போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன், “இந்து மதத்தை விட்டு வெளியேறி வேறு மதத்தைத் தழுவியவர்களை, மீண்டும் மதம் மாற்ற வேண்டும்” என்று, பாஜக இளைஞர் அணியின் தேசியத் தலைவரும், எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா அழைப்பு விடுத்தது இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், அவருக்கு நாடு முழுவதிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. 

இதனிடையே, நாடு முழுவதும் உள்ள எதிர்கட்கள் மற்றும் இஸ்லாம் அமைப்பினரின் கடும் கண்டனத்தை அடுத்து, பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, தனது கருத்தை திரும்ப பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.