தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராகவும் மிக முக்கிய நடிகராகவும் விளங்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் இடைவிடாது மக்கள் பணியாற்றி வருகிறார். முன்னதாக நடிகராக தனது திரை பயணத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களை கொண்டாடும் வகையில் 10 YEARS OF UDHAYANITHI STALIN  WITH GALATTA நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் கலகத் தலைவன் திரைப்படம் குறித்து படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். இதனை அடுத்து நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மற்றும் விநியோகஸ்தராகவும் விளங்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது திரைப்பயணத்தின் அனுபவங்களையும் அஜித்குமாரின் துணிவு மற்றும் தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில், ஒரு திரைப்படத்தை பார்க்காமலேயே அதை வெளியிட ஒப்புக்கொண்டு உள்ளீர்கள் அந்த படம் துணிவு..எப்படி..? என்ற கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “போனி கபூர் சாருடன் தொடர்ந்து படம் செய்து கொண்டிருக்கிறோம். நெஞ்சுக்கு நீதி பண்ணினோம் 3-4 மாதங்கள் முன்பு நெஞ்சுக்கு நீதி சமயத்திலேயே நாங்கள் பேசி கையெழுத்து ஆகிவிட்டது. அறிவிக்காமல் இருந்தோம் தற்போது அறிவித்ததும் எல்லோரும் கொஞ்சம் ஷாக் ஆகி விட்டார்கள். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. போனி கபூர் அவர்களிடம் முதலில் கேட்டதே சார் படத்தில் பைக் ரேசிங் காட்சிகள் இருக்கிறதா..? எனக் கேட்டேன். பைக் ரேசிங்கும் இருக்கிறது மற்ற அனைத்தும் இருக்கிறது என்று சொன்னார். படம் நன்றாக இருக்கும் என நான் நம்புகிறேன். பொங்கல் ரிலீஸ்…” என தெரிவித்தார்.

இதனை அடுத்து வாரிசு என கேட்க அரங்கமே ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது, அப்போது, “இருங்க ரொம்ப பில்டப் எல்லாம் கொடுக்க வேண்டாம் வாரிசு ரெட் ஜெயண்ட்ல பண்ணல... தளபதி விஜய் அவர்களை நான் எப்போதும் அண்ணன் என்று தான் கூப்பிடுவேன். அவருக்கு ரெட் ஜெயண்ட் சார்பாக வாழ்த்துக்கள். அவர் இல்லாமல் ரெட் ஜெயன்டே கிடையாது. முதல் படமே குருவி… அவரை வைத்து தான் நாங்கள் முதல் படமே தயாரித்தோம். என் மீது எப்போதும் தனி பிரியமும் பாசமும் கொண்டவர். அவரது வாரிசு திரைப்படத்திற்கும் அவரது அடுத்தடுத்த திரைப்படங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.