தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சக்கரவர்த்தியாகவும் தென்னிந்திய திரையுலகின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் திகழும் தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறி, எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த போதும் விஜயின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பு மட்டும் குறைவதே இல்லை. அப்படி எக்கச்சக்கமான எதிர்பார்ப்பில் அடுத்து தயாராகிறது தளபதி67.

மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி விஜய் இணைகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு இயக்கும் படம் என தளபதி 67 திரைப்படம் இந்திய திரையுலகில் எதிர்பார்க்கப்படும் முக்கிய படமாக மாறி இருக்கிறது. சமீபத்தில் படப்பூஜை நடைபெற்ற நிலையில், சில தினங்களுக்கு முன்பு தளபதி 67 படப்பிடிப்பும் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு தான் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்ததால் தற்போது அனைத்து விஜய் ரசிகர்களின் கவனமும் வாரிசு பக்கம் தான். முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு (தெலுங்கில் வாரசடு) படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

தளபதி விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், பிக்பாஸ் சம்யுகதா உள்ளிட்டோர் வாரிசு படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார். 

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிடும் வாரிசு திரைப்படம் வருகிற பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகியிருக்கும் வாரிசு திரைப்படத்தின் பக்கா மாஸ் ட்ரெய்லர் இதோ…