நடிகர் அர்ஜூன் தாஸ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள புகைப்படம் அவரது அடுத்த படம் குறித்த சந்தேகங்களை நெட்டிசன்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் 2012ல் வெளியான 'பெருமான்' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அர்ஜூன் தாஸ். அதைத்தொடர்ந்து 'Random Numbers' என்ற குறும்படம் மற்றும் 'ஆக்சிஜன்' என்ற தெலுங்கு படத்தில் அவர் நடித்திருந்தாலும் அவரை அனைவருக்கும் அடையாளம் காட்டியது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருந்த 'கைதி' படம்தான். தனது தனித்துவமான குரலால் கைதி படத்தில் இவர் காட்டியிருந்த வில்லத்தனம் பலராலும் ரசிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர், இயக்குநர் அட்லீ தயாரித்த 'அந்தகாரம்' படத்திலும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் 'மாஸ்டர்', அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான 'புத்தம்புதுக் காலை விடியாதா' தொகுப்புப்படம், சிறப்புத் தோற்றத்தில் 'விக்ரம்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இவர் நடிப்பில் தமிழில் அடுத்தாக இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ள அநீதி மற்றும் தெலுங்கில் நடித்துள்ள புட்ட பொம்மா படங்கள் வெளியாகவுள்ளன. அதைத்தொடர்ந்து இவர் 'அங்கமாலா டைரீஸ்' மலையாளப் படத்தின் இந்தி ரீமேக்கிலும், 'டாங்கே' படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ஆக்ஷன்' என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ள ஸ்டோரி பதிவு தற்சமயம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் தற்சமயம் தளபதி விஜயை வைத்து 'தளபதி 67' படத்தை இயக்கும் வேலைகளில் பிசியாகியுள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் மன்சூர் அலிகான் மற்றும் கௌதம் வாசுதே மேனன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜய்க்கு ஜோடியாக இப்படத்தில் த்ரிஷா நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் கதாநாயகி குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

லோகேஷ் கனகராஜின் 'கைதி' மற்றும் 'மாஸ்டர்' படங்களில் அர்ஜூன் தாஸ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மேலும் கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் காட்சி தந்திருந்தார். இந்நிலையில், 'தளபதி 67' படத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பதன் பொருட்டு அவர் தனது இன்ஸ்டாகிராமில் அப்பதிவை இட்டுள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் மனோபாலா 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகவும், தான் விஜயை சந்தித்துப் பேசியதாகவும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது இணையத்தில் வைரலான நிலையில், அப்பதிவை அவர் நீக்கினார். மேலும் தான் அப்பதிவை நீக்கிவிட்டதாகவும், மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் மற்றொரு பதிவில் தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் அர்ஜூன் தாஸ் 'தளபதி 67' படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று யூகிக்கப்படுகிறது. ஆயினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் கீழே.

arjun doss instagram post getting viral in social media thalapathy 67