இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகவும் சிறந்த நடிகையுகவும் திகழும் நடிகை டாப்சி  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியாவின் பல மொழி திரையுலகங்களில் வித்தியாசமான கதைக்களங்களையும் சிறந்த கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர். 

முன்னதாக தமிழில் ஜன கண மன மற்றும் ஏலியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் டாப்ஸி தொடர்ந்து தெலுங்கில் மிஷன் இம்பாசிபிள் மற்றும் பாலிவுட்டில் தோபாரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த 2 படங்களில் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

நடிகையாக மட்டுமல்லாமல் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ள டாப்ஸி தனது அவுட்சைடர்ஸ் ஃபிலிம் தயாரிப்பில் உருவாகும் ஹாரர் த்ரில்லர் திரைப்படமான BLURR திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்த வரிசையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மிதாலி ராஜ்-ன் பயோபிக் திரைப்படத்தில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்துள்ள திரைப்படம் சபாஷ் மித்து. 

வயாகாம்18 ஸ்டுடியோஸ் கொலோசியம் மீடியா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ள சபாஷ் மித்து படத்தை இயக்குனர் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் மிதாலிராஜ் மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்து சகாப்தத்தை உருவாக்கியுள்ளார். 

இந்நிலையில் மிதாலி ராஜின் பயோபிக் திரைப்படமாக தயாராகியிருக்கும் சபாஷ் மித்து திரைப்படம் வருகிற ஜூலை 17-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.