கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை மனைவியை பலவந்தமாக குடிக்க செய்து கொலை செய்த கொடூர கணவரை தெலங்கானா போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்தியாவில் பெண்களுக்கு குடும்பவன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. பெண்களுக்கு என்று தனிச்சட்டம் இருந்தாலும் வரதட்சணை கொடுமை, செக்ஸ் கொடுமை என்று பல்வேறு கொடுமைகளை ஆண்களால் பெண்களுக்கு தற்போதுவரை ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ராஜ்பேட் தண்டா பகுதியை சேர்ந்தவர் தருண் வயது 34. இவருக்கும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணி வயது 30 என்ற பெண்ணுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன நாள் முதலாகவே, கல்யாணியிடம் அதிக வரதட்சணை கேட்டு தருணும், அவரது குடும்பத்தினரும் அவரை கொடுமை செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கல்யாணி கர்ப்பம் தரித்திருக்கிறார். இருந்தபோதிலும், அவரிடம் வரதட்சணை கேட்டு கணவர் தருண் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது கல்யாணியை சரமாரியாக தாக்கிய கணவர் தருண், கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடிக்குமாறு அவரை நிர்பந்தப்படுத்தியுள்ளார். முதலில் மறுத்த கல்யாணி, பின்னர் கொடுமை தாங்க முடியாமல் அந்த ஆசிட்டை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் வலியால் அவர் அலறித் துடிக்க தொடங்கியதும் அங்கிருந்து கணவர் தருண் தப்பியோடினார்.

அதனைத்தொடர்ந்து கல்யாணியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக கல்யாணியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து தருணை தேடி வருகின்றனர்.