தமிழ்நாடு மின்வரலாற்றில் ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்பயன்பாடு!
தமிழகத்தில் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒரே நாளில் மின் பயன்பாடு வரலாற்றில் இல்லாத அளவிற்கு பதிவாகியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதை அடுத்து மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் மின் பயன்பாடு வரலாற்றில் இல்லாத அளவிற்கு பதிவாகியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோடைக்கால வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலின் தாக்கம் தாங்காத மக்கள் ஃபேன், ஏ.சி. உள்ளிட்ட மின்சாதன பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மின்சார தேவையும் அதிகரித்துள்ளது.
சமீபமாக மின்தட்டுப்பாடு காரணத்தினால் நாளுக்கு இரண்டு, மூன்று மணி நேரம் மின் விநியோகம் இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும் மக்கள் சமூகவலைத்தளங்களில் மின் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்துவந்தனர். அதனைத்தொடர்ந்து தோனியின் மனைவி மின் தட்டுப்பாடு குறித்து மின்சார துறைக்கு ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.
இந்த சூழலில் இதனைக் கருத்தில்கொண்டு அனைத்து மின் உற்பத்தி நிலையங்களிலும் முழு உற்பத்தி திறனுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், 5 யூனிட்டுகளில் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. இதனிடையே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அண்மைகாலமாக மின்வெட்டு அதிகரித்துள்ளது. இதுக்குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பட்ட போது, அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய அரசு தினசரி வழங்க வேண்டிய நிலக்கரியையும் போதிய அளவு வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.
அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் இதனால் 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மொத்தமுள்ள 5 யூனிட்களில் 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டன. மேலும் 2 யூனிட் மட்டும் செயல்பட்டது. இதனால் தினமும் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. தமிழகத்திற்கு தேவையான நிலக்கரி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியது. இதை அடுத்து இன்று 29,000 டன் நிலக்கரி வந்ததையடுத்து, மேலும் 2 அலகில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் 1,2,3 ஆகிய மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவுக்கு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், நேற்று 28/04/22 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 387.047 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெகாவாட் அளவில் 17,370 மெகா வாட். இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு மார்ச் 2022 இறுதியில், 378.328 மில்லியன் யூனிட் அல்லது 17,196 மெகா வாட் என்று தெரிவித்துள்ளார். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் மின் பயன்பாடு வரலாற்றில் இல்லாத அளவிற்கு பதிவாகியுள்ளது.