தனக்கே உரித்தான ஸ்டைலில் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் அடுத்து ரிலீஸாகவுள்ள திரைப்படம் பிசாசு 2. முன்னதாக இயக்குனர் பாலா தயாரிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ஹாரர் த்ரில்லர் திரைப்படமான பிசாசு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

பிசாசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாக்கியுள்ள பிசாசு 2 திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் பிசாசு 2 திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார். சிவ சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள பிசாசு 2 படத்திற்கு கீர்த்தனா மற்றும் சுசில் உமாபதி ஆகியோர் படத்தொகுப்பு செய்துள்ளனர் பாடல்களை கவிஞர் கபிலன் எழுதியுள்ளார்.

பிசாசு 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் பிசாசு 2 படத்தின் டீசர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வரும் பிசாசு 2 டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.