தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழ் திரையுலகில் பல முக்கியமான திரைப்படங்களை தயாரித்துள்ளது. அந்தவகையில் அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்திசுரேஷ் & வைகைப்புயல் வடிவேலு இணைந்து நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

மேலும் வரிசையாக பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களை வெளியிட்டு வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த ஆண்டில் (2022) சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், பிரபாஸின் ராதேஷ்யாம், விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், தளபதி விஜயின் பீஸ்ட், சிவகார்த்திகேயனின் டான் ஆகிய படங்களை வெளியிட்டுள்ளது. அடுத்து உலகநாயகன் கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படத்தையும் வெளியிடவுள்ளது.

இந்த வரிசையில் அடுத்ததாக நடிகர் ஆர்யா நடித்துள்ள கேப்டன் திரைப்படத்தின் ரிலீஸ் உரிமத்தையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. டெடி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் உடன் இணைந்து ஆர்யா நடித்திருக்கும் கேப்டன் திரைப்படத்தை பிங்க் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

கேப்டன் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க, சிம்ரன், காவியா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேப்டன் படத்திற்கு யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்ய டி.இமான் இசையமைத்துள்ளார். 

சமீபத்தில் கேப்டன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற செப்டம்பர் 8ஆம் தேதி கேப்டன் படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.