போட்றா வெடிய!- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜின் தலைவர்171... ரசிகர்கள் எதிர்பார்த்த அதிரடியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜின் தலைவர்171 அறிவிப்பு,Super star rajinikanth lokesh kanagaraj in thalaivar171 movie announcement | Galatta

ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்புகளில் ஒன்று தான் தலைவர்171. இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த், தற்போதைய இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் தலைவர்171 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடைபெற்ற நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இடம் இது குறித்து கேட்டபோது அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிவித்திருந்தார். அந்த சமயத்தில் லியோ திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தன.

மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் உடன் இணைந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தனது லியோ திரைப்படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். லியோ படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக VFX பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம் பெற்ற கழுதைப்புலி படத்தில் இடம் பெற்றிருக்கும் மிரட்டல் ஆக்ஷன் காட்சிக்கான CG பணிகள் தற்போது பெங்களூரில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. அடுத்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் உலகெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது.

தளபதி விஜயின் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முழு பணிகளிலும் தயாரிப்பு நிறுவனம் முழு கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே விக்ரம் எனும் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து லியோ படத்தின் மூலம் இன்னும் பெரிய வெற்றியை எட்டுவார் என பேசப்படும் நிலையில், அதற்கடுத்து அதைவிட மிகப்பெரிய வெற்றியை எட்டும் வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அடுத்த படத்தில் இணையும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சமீபத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் இமாலய வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் புதிய உச்சம் தொட்டிருக்கும் நிலையில் ஜெயிலர் திரைப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்தையும் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அண்ணாத்த மற்றும் ஜெயிலர் படங்களைத் தொடர்ந்து வரிசையாக மூன்றாவது முறை தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைகிறது சன் பிக்சர்ஸ். ராக்ஸ்டார் அனிருத் இசை அமைக்கும் இப்படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இதர அறிவிப்புகள் லியோ திரைப்படத்தின் ரிலீஸ்க்கு பிறகு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் காம்போவின் தலைவர் 171 பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…
 

We are happy to announce Superstar @rajinikanth’s #Thalaivar171

Written & Directed by @Dir_Lokesh

An @anirudhofficial musical

Action by @anbariv pic.twitter.com/fNGCUZq1xi

— Sun Pictures (@sunpictures) September 11, 2023