"சேதுபதி என்று தான் கூப்பிடுவேன்!"- நடிகர் மாரிமுத்துவின் மறைவு குறித்து அவரது நெருங்கிய நண்பரான SJசூர்யா பேசிய எமோஷனல் வீடியோ!

மாரிமுத்துவின் மறைவு குறித்து SJசூர்யா பேசிய எமோஷனல் வீடியோ,sj suryah speaks about actor marimuthu emotional video | Galatta

தமிழ் சினிமா & சின்னத்திரையை சார்ந்த பிரபலங்களையும் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வந்த செய்தி தான் நடிகர் மாரிமுத்துவின் இறப்பு செய்தி. அந்த வகையில் நடிகர் மாரிமுத்துவின் இறப்பு குறித்து அவரது நெருங்கிய நண்பரும் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது மிகவும் எமோஷனலாக பேசியிருக்கிறார். தனது திரை பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரிமுத்து அவர்கள் ஆரம்பத்தில் நடிகர் ராஜ்கிரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம், இயக்குனர் வசந்த், இயக்குனர் சீமான் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஆகியோரது திரைப்படங்களிலும் உதவி இயக்குனராகவும் இணை இயக்குனராகவும் மாரிமுத்து அவர்கள் பணியாற்றி இருக்கிறார்.

மேலும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் உதவியாளராக பணியாற்றிய மாரிமுத்து அவர்கள் இயக்குனராக கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தொடர்ந்து நடிகராக யுத்தம் செய், நிமிர்ந்து நில், ஜீவா, கொம்பன், கடைக்குட்டி சிங்கம், மருது, கொடி, லாபம், டாக்டர், விக்ரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் மாரிமுத்து, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த பரியேறும் பெருமாள் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். கடைசியாக சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகியிருக்கும் ஜெயிலர் திரைப்படத்திலும் "பன்னீர்" முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய இடத்தில் மாரிமுத்து நடித்திருக்கிறார்.

சினிமா மட்டுமல்லாது சின்னத்திரையிலும் மெகா தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த மாரிமுத்து அவர்கள் தற்போது சன் தொலைக்காட்சியில் மிக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் எனும் மெகா தொடரில் ஏஜிஎஸ் எனும் ஆதிமுத்து குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் தனக்கான ஸ்டைலில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.இந்த நிலையில் நேற்று செப்டம்பர் 8ஆம் தேதி திடீரென மாரடைப்பால் நடிகர் மாரிமுத்து காலமானார். நடிகர் மாரிமுத்துவின் மறைவு திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது இறுதி சடங்குகள் அனைத்தும் அவரது சொந்த ஊரான தேனியில் உள்ள வருசநாட்டில் இன்று செப்டம்பர் 9ம் தேதி நடைபெற்றுள்ளது. 

இந்த நிலையில் மாரிமுத்து அவர்களின் நெருங்கிய நண்பரும், இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அவர்கள் மாரிமுத்து அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய போது பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில்

“மாரிமுத்து சாரை நாங்கள் சேதுபதி என்று தான் கூப்பிடுவோம். அவருடைய இறப்பு மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. வசந்த் சாரிடம் நான் உதவி இயக்குனராக இருந்த போது அவர் எனக்கு சீனியர் அவர் கோ டைரக்டர் நான் கடைசி அசிஸ்டன்ட். ரொம்ப நல்ல மனிதர் மனம் விட்டு பல பேரை சிரிக்க வைக்க கூடிய ஒரு மனிதர். அவருடைய மறைவு மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இன்று வாழ்க்கையில் அவர் நல்ல இடத்திற்கு வந்து கொண்டு இருந்த போது இப்படி ஆகிவிட்டது. அதை எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இறைவன் இந்த நேரத்தில் அவருடைய குடும்பத்திற்கு இப்படி ஒரு கஷ்டத்தை ஏன் கொடுத்தான் என தெரியவில்லை. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்”

என எமோஷனாக பேசினார். எஸ்.ஜே.சூர்யா பேசிய அந்த வீடியோ இதோ…