மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் சிலம்பரசன் நடித்திருக்கும் மாநாடு திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது. முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்திருக்கும் மாநாடு திரைப்படத்தை V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்துள்ளார்.

நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க, மிரட்டலான வில்லனாக இயக்குனர் S.J.சூர்யா நடித்துள்ளார். மேலும் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி அமரன் ,கருணாகரன்,மனோஜ் பாரதிராஜா  மற்றும் அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள மாநாடு திரைப்படத்திற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாளை (அக்டோபர் 2ஆம் தேதி) மாநாடு படத்தின் ட்ரெய்லர் வெளிவரவுள்ள நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு ட்ரெய்லர் தயாராக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். 2:09 நிமிடங்கள் மாநாடு ட்ரெய்லர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் மாநாடு திரைப்படத்தின் டைட்டில் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் மாநாடு திரைப்படத்தின் மற்ற மொழிகளுக்கான டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாகவும், புதிய டைட்டில் நாளை (அக்டோபர் 2ஆம் தேதி) ட்ரெய்லரோடு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.