தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகராகவும் சிறந்த தயாரிப்பாளராகவும் வலம் வரும் நடிகர் சூர்யா, தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரித்துள்ள நான்கு திரைப்படங்கள் வரிசையாக நான்கு மாதங்களில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவருகின்றன. முன்னதாக கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் திரைப்படம் வெளியானது. 

இதனையடுத்து நடிகை ஜோதிகாவின் 50-வது படமாக உடன்பிறப்பே திரைப்படம் ஆயுதபூஜை வெளியீடாக அக்டோபர் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் டிசம்பரில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஓ மை டாக் திரைப்படம் வெளிவர உள்ள நிலையில் நவம்பரில் வெளிவருகிறது சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம். 

இயக்குனர் து.சே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெய்பீம் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் ராஜிஷா விஜயன், லிஜோ மொள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடிக்க, நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில். ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் ஜெய் பீம் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது. தீபாவளி விருந்தாக நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக ஜெய் பீம் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. எனவே விரைவில் ஜெய்பீம் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.