சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

2021 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 44 வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன்  தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் சஹா களமிறங்கினர். ஜேசன் ராய் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹேசில்வுட் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் 11 ரன்களில் நடையை கட்டினார்.

அதே நேரத்தில், மறுபுறம் சற்று நிலைத்து நின்று விளையாடி தொடக்க வீரர் சஹா, அதிக பட்சமாக 46 பந்துகளில் ஒரு பவுண்டரி 2 சிக்சர்களுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அத்துடன், பவர்பிளே ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 1 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முதல் 10 ஓவர்களில் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 63 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

சென்னை அணியின் சிறப்பான பந்து வீச்சால் அதன் பிறகு வந்த ஐதராபாத் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பிராவோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஜடேஜா மற்றும் தாக்குர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

இதனையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனர்கள் டு பிளசிஸ் - கெய்க்வாட் சற்று பொறுமையாகவே விளையாடினார்கள். 3 ஓவர்கள் வரையில் அப்படி ஒரு மயான அமைதியாக விளையாடிய அவர்கள், 3 ஓவர்களுக்கு 12 ரன்கள் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்திருந்தது. 

அதன் பிறகு தான் இருவரும் சற்றும் விறுவிறுப்பாக விளையாடத் தொடங்கினார்கள். அதன்படி, முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

எனினும், சிறப்பாக விளையாடி வந்த ருதுராஜ் கெய்க்வாட், 38 பந்துகளில் 4 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களுடனும் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனாலும், டு பிளசிஸ் தனது வேகத்தை சற்றும் குறைக்கவில்லை. அத்துடன், ஐதரபாத் பவுலர்களின் தவறான பந்துகளை அவர் விட்டு விளாச தவறவேயில்லை. பின்னர் வந்த மொயீன் அலி 17 ரன்கள் மட்டுமே எடுத்து போல்டாகி நடையை கட்டினார்.  

அதன் தொடர்ச்சியாக வந்த சின்ன தல சுரேஷ் ரெய்னா, வெறும் 2 ரன்னில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

அதன் தொடர்ச்சியாக அதே ஓவரில் டு பிளசிஸ் 41 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால், போட்டியில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 

எனினும், டார்கெட் குறைவாக இருந்த காரணத்தினால், ஹைதராபாத் அணியால் அதற்கு மேல் நெருக்கடி கொடுக்க முடியாமல் தடுமாறியது. 

போட்டியில் மற்றொரு திருப்புமுனையாக கேப்டன் தோனி, கடைசி ஓவரில் அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் சிக்ஸ் விளாசி வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலமாக, சென்னை அணி 19.4 வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றிப் பெற்றது.  
சென்னை அணியின் இந்த வெற்றியின் மூலம், 2021 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 18 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

குறிப்பாக, இந்த போட்டியில் விக்கெட் கீப்பராக தோனி 3 கேட்ச்களை பிடித்தார். அதில் சன் ரைசர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் சஹாவின் கேட்சை பிடித்த தோனி, ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி விக்கெட் கீப்பராக 100 கேட்ச்களை பிடித்து சாதனை படைத்து உள்ளார். கீப்பர் ஒருவர், ஒரே அணிக்காக 100 கேட்ச் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

இதனிடையே, இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரில் 45 வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி - பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.