தென்னிந்திய சினிமாவின் முன்னணி கமர்சியல் இயக்குனராக, கதாநாயகனாக, சிறந்த நடன இயக்குனராக என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ருத்ரன். தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் S.கதிரேசன், தனது FIVE STAR கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கவிருக்கிறார். 

ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். முன்னணி ஒளிப்பதிவாளர் R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் ருத்ரன் படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் ருத்ரன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் அதிகாரம் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி  மற்றும் எஸ் கதிரேசனின் 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் அதிகாரம் திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். 

அதிகாரம் திரைப்படத்தின் கதை திரைக்கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸின் பிறந்த நாளான இன்று அதிகாரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் வெளியானது. அடுத்த ஆண்டு (2022)  ஜனவரி முதல் அதிகாரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.