இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் 67-வது இந்திய தேசிய திரைப்பட விருது விழாவில் திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து புதுடெல்லியில் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் அவர்களை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்று சென்னை திரும்பினார்.

இந்நிலையில் நேற்று (அக்டோபர் 28 வியாழக்கிழமை) லேசான தலைச்சுற்றல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த், “வழக்கமாக மேற்கொள்ளும் உடல் பரிசோதனை”க்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து தற்போது காவேரி மருத்துவமனை நிர்வாகம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்த முக்கிய அறிக்கையை வெளியிட்டது. தலைசுற்றல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைக்குப் பிறகு Carotid Artery Revascularization  எனும் இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை நீக்கும் மறுசுழற்சி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.பரிசோதனைகளும் சிகிச்சைகளும் நல்ல முறையில் நடைபெற்றதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைந்து ஒருசில தினங்களில் வீடு திரும்புவார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் வருகிற தீபாவளி வெளியீடாக நவம்பர் 4ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.