தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள். தனக்கே உரித்தான பாணியில் பல சூப்பர் ஹிட் மாஸ், கமர்சியல், எமோஷனல் கலந்த ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஆளுமைகளான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இருவரையும் வைத்து இயக்கிய பெருமை கொண்ட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடைசியாக தமிழில் வெளிவந்த திரைப்படம் லிங்கா. தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கில் ரூலர் படத்தை இயக்கியிருந்தார்.

இதனையடுத்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பியான நடிகர் எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் இணைந்து ராகவா லாரன்ஸ் இதுவரை இல்லாத அளவுக்கு மாஸான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் அவர்களின் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏ ஆர் என்டர்டெய்னமன்ட் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடிகர் ராகவா லாரன்ஸின் பிறந்த நாளான இன்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருவதால் அது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.