மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும் என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

corono

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. 

இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,94,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு குறைவாக இருந்தாலும் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் உள்ளிட்ட தொற்று பரவல் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

அதனைத்தொடர்ந்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் மாநிலங்களில் குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அதே போல திரவநிலை மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களை தடையின்றி எடுத்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க எனவும், மாநிலங்களில் உள்ள ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறைகளை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு கொரோனா 2-வது அலையின் போது மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த ஆண்டு தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.