உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதில் 17 பேர் காயம் அடைந்த நிலையில் ஐ.நா. அமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது.

ukraine warஉக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 15-வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர். ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.  இதுவரை 20 லட்சத்திற்கும் கூடுதலானோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. இந்த சம்பவத்தில் 17 பேர் காயம் அடைந்தனர். இதில் மருத்துவமனை மற்றும் பிரசவ வார்டு உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்தன. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மருத்துவமனையின் இடிபாடுகளுக்குள் மக்கள், குழந்தைகள் உள்ளனர்.  இது அக்கிரமம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதலுக்கு சர்வதேச தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.  காட்டுமிராண்டித்தனம் என வெள்ளை மாளிகையும், சீரழிவு என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் சாடி உள்ளனர்.  சுகாதார மையம் ஒரு போதும் தாக்குதலுக்கு இலக்காக கூடாது என ஐ.நா. அமைப்பின் செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் ஆன்டனியோ கட்டரெஸ் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள பிரசவ மற்றும் குழந்தைகள் வார்டுகள் நிறைந்த மருத்துவமனை ஒன்றின் மீது நடந்த தாக்குதல் பயங்கரம் ஆனது.  போருடன் எந்தவித தொடர்பும் இல்லாத பொதுமக்கள் அதற்கு அதிக விலை கொடுத்து வருகின்றனர்.  உணர்வற்ற இந்த வன்முறை நிச்சயம் நிறுத்தப்பட வேண்டும்.  இந்த படுகொலைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.