தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், லத்திகா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து நடிகர் சந்தானம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்தார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் கௌரவ தோற்றங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வரும் பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் கடைசியாக நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்த கேப்மாரி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

பிக்கப் டிராப் என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தை பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கி நடிக்கிறார். இதில் பவர் ஸ்டாருக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலமும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையுமான வனிதா விஜயகுமார் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், நேற்று படப்பிடிப்பின் போது திடீரென பவர் ஸ்டார் சீனிவாசன் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக படக்குழுவினர் பவர் ஸ்டார் சீனிவாசனை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, பவர்ஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து பவர் ஸ்டார் சீனிவாசனின் உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.