மலையாள திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ரீலக்ஷ்மி திடீரென மரணமடைந்தார். லக்ஷ்மியின் உயிரிழப்பு மலையாளத் திரையுலகிலும், சின்னத்திரையிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீலக்ஷ்மியின் வயது 38.

சிறந்த நடன கலைஞரான ஸ்ரீலக்ஷ்மி, கேரளாவின் திரிபுனித்ராவில் உள்ள அரவிந்தாக்ஷ மேனன் அவர்களின் நடன கல்லூரியான ஜெயகேரளா நடன கல்லூரியில் பலமுறை தனது சிறந்த நடனத்தை அரங்கேற்றியுள்ளார். மேலும் தனது நடனத்திற்க்காக அனைத்து கேரள நடன கல்லூரிகளின் மாநில விருதையும் கடந்த 2020 ஆம் ஆண்டு வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள சின்னத்திரை உலகில் பல முன்னணி மெகா தொடர்களிலும் பல குறும்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீலக்ஷ்மி தனது கணவர் வினோத் மற்றும் தனது 2 குழந்தைகளுடன் கேரளாவில் வசித்து வந்தார். இந்நிலையில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகை ஸ்ரீலக்ஷ்மி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஸ்ரீலக்ஷ்மிக்கு ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி நடிகை ஸ்ரீலக்ஷ்மி காலமானார். மறைந்த நடிகை ஸ்ரீ லக்ஷ்மிக்கு மலையாளத் திரையுலகின் முன்னணி பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.