சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் இருவரும் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அடுத்ததாக முதல்முறை சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை பா.ரஞ்சித் இயக்கவுள்ளார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து  ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடியினர் தலைவராக பாடுபட்ட பிஸ்ரா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய பயோபிக் திரைப்படமாக ஹிந்தியில் தயாராகவுள்ள படத்தையும் பா.ரஞ்சித் இயக்கவுள்ளார். 

இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தனது நீலம் புரோடக்சன்ஸ் வாயிலாக சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் கடைசியாக ரைட்டர் & குதிரைவால் ஆகிய படங்கள் வெளிவந்து கவனத்தை ஈர்த்தன. இந்த வரிசையில் அடுத்ததாக பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் J.பேபி.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில் J.பேபி (BABY'S DAY OUT) படத்தில் ஊர்வசி மற்றும் தினேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர் லொள்ளு சபா மாறன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சேதுமாதவன் ஒளிப்பதிவில் J.பேபி திரைப்படத்துக்கு சண்முகம் வேலுசாமி படத்தொகுப்பு செய்ய, டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.

நீலம் புரோடக்சன்ஸ், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் & லிட்டில் ரெட் கார் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து வழங்கும் J.பேபி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், J.பேபி திரைப்படத்தின் முதல் பாடல் வருகிற மே 8-ஆம் தேதி அன்னையர் தினத்தன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.