இந்திய திரையுலகின் சிறந்த நடிகராகவும் சீரான ஒளிப்பதிவாளராகவும் திகழ்பவர் நட்டி நட்ராஜ். பல திரைப்படங்களில் இவர் நடித்தாலும், சதுரங்க வேட்டை திரைப்படம் இவரை புகழின் உச்சத்தில் நிறுத்தியது. கடந்த ஆண்டு வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இந்த ஆண்டு காட்ஃபாதர், வால்டர் என தொடர்ச்சியாக இவரது படங்கள் வெளியானது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து கர்ணன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். 

சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நட்டி, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதும், நாட்டு நடப்பு பற்றி ட்வீட் செய்தும் வருகிறார். இவர் பதிவிடும் ட்வீட்டுகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சமீபத்தில் தமிழ் சினிமாவில் இருக்கும் குரூபிசம் குறித்து பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில் தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு... யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க... யாருங்க நீங்க???? என கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்நிலையில் டெனெட் படத்தை கிண்டல் செய்து விமர்சித்துள்ளார் நட்டி. அவரது பதிவில் கூறியிருப்பதாவது: ரொம்ப நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் டெனெட் திரைப்படம் பார்த்தோம்.. கரகாட்டக்காரன் திரைப்படத்தின் வாழைப்பழ காமெடிதான் நினைவிற்கு வந்தது. போற்றுவார் போற்றட்டும்.. தூற்றுவார் தூற்றட்டும்.. போகட்டும் கடவுளுக்கே...எங்க தமிழ், இந்திய இயக்குனர்கள் திறமைசாலிகள்...sorry Chris Nolan என்று பதிவு செய்திருக்கிறார் நட்ராஜ். 

ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் டெனெட். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கொரோனா வைரஸ் நெருக்கடியால் ரிலீஸ் தேதி பலமுறை ஒத்திவைக்கப்பட்ட இப்படம் கடந்த மாதம் சில நாடுகளில் மட்டும் வெளியானது. தற்போது இந்தியாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் கடந்த டிசம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்டது. 

படத்தின் திரைக்கதை மற்ற நோலன் படங்களைக் காட்டிலும் மிகவும் குழப்பமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. வழக்கமாக, நோலன் திரைப்படங்களை ஒருமுறை பார்த்தாலே புரியாது. ஆனால், இப்படம் எத்தனை முறை பார்த்தாலும் புரியாது என்ற ரீதியில் பலரும் விமர்சித்தனர். நோலனுக்கே நோஸ்கட் தந்த நட்டி நட்ராஜின் பதிவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நம்ம ஊரு இணையவாசிகள். 

நட்டி கைவசம் ஹிரோஷிமா என்ற திரைப்படம் உள்ளது. இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. கசாலி இந்த படத்தை இயக்கி வருகிறார். தாஜ்நூர் இசையில், மு.காசி விஸ்வநாதன் எடிட்டிங்கில், சதீஷ் ஒளிப்பதிவில், பிரபல நடிகர்கள் மனோபாலா, டி.சிவா மற்றும் பலர் இதில் நடிக்க உள்ளனர். இதைப் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.