வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் அசுரன். கடந்த வருடம் 2019 அக்டோபர் மாதம் வெளியான இப்படம் தனுஷ் ரசிகர்களை தாண்டி சினிமா பிரியர்களை கவர்ந்தது. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய ஹிட்டானது. மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே அருணாச்சலம், அபிராமி, ஏ. வெங்கடேஷ், பாலாஜி சக்திவேல், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை கொண்டு இந்த படம் உருவானது.

இந்த படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக்காகிறது. கலைப்புலி எஸ்.தாணு மற்றும் சுரேஷ் ப்ரோடக்ஷன்ஸ் சேர்ந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். தனுஷ் நடித்த வேடத்தில் வெங்கடேஷும், மஞ்சு வாரியர் நடித்திருந்த வேடத்தில் நடிகை பிரியாமணியும் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் அட்டலா இந்த படத்தை இயக்கியுள்ளார். 

இந்நிலையில் நாரப்பா படத்தின் சிறப்பு கண்ணோட்டத்தை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். அனல்பறக்கும் இந்த காட்சியில் உக்கிரமாக கோபத்துடன் நடந்து வருகிறார் வெங்கடேஷ். இந்த காட்சியை பார்த்த பலருக்கும் அசுரன் படத்தில் தனுஷ் நடித்த காட்சி தான் நினைவுக்கு வந்திருக்கும். ரீமேக் என்றாலும் அதில் கச்சிதம் காட்டிய வெங்கடேஷை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். 

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதெராபாத்தில் நிறைவடைந்தது. முறையான பாதுகாப்புடன் படப்பிடிப்பை முடித்தனர். தற்போது படக்குழுவினர் இறுதி கட்ட பணியான போஸ்ட் ப்ரோடுக்ஷன் மற்றும் ரிலீஸ் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி பற்றிய விவரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த 2020-ம் ஆண்டு வெங்கடேஷுக்கு எந்த படமும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு F2 மற்றும் வெங்கி மாமா போன்ற படங்களில் நடித்து அசத்தினார். வெங்கடேஷ் ஏற்கனவே இறுதி சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ளார். தமிழில் மாதவன் நடித்த பாத்திரத்தை இவர் தெலுங்கில் நடித்து ஈர்த்தார். அதே போல் இந்த அசுரன் ரீமேக்கான நாரப்பா படத்திலும் சிறப்பாக நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.