மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகி வரும் படம் தலைவி. ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இப்படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் பிரபலம் கங்கணா ரனாவத் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. சமீபத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாகத் தொடங்கப்பட்டு நேற்று முடிக்கப்பட்டது. இது தொடர்பாக கங்கணா ரனாவத் தனது ட்விட்டர் பதிவில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை செய்துள்ளார். 

இன்று நாங்கள் வெற்றிகரமாக எங்கள் கனவுத் திரைப்படமான தலைவியின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளோம். எந்த ஒரு நடிகருக்கும் எளிதில் கிடைக்காத ஒரு கதாபாத்திரம், எனக்கு ரத்தமும் சதையுமாகக் கிடைத்தது. நான் அதை மிகவும் நேசித்தேன். ஆனால் திடீரென அதற்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. கலவையான உணர்ச்சிகள் மேலிடுகின்றன. வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் இந்த வாய்ப்பு. தலைவி படக்குழுவினருக்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார். 

தலைவி படப்பிடிப்பு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இறுதிக்கட்டப் பணிகளான போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது படக்குழு. இப்படத்தில் எம்.ஜி.ஆர்-ஆக அரவிந்த்சாமி, அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரனாக மதுபாலா நடிக்கின்றனர். 

ரோஜா படத்துக்கு பிறகு மதுபாலாவும் அரவிந்த் சாமியும் இதில் இணைந்துள்ளனர். இறுதி கட்ட படப்பிடிப்பில் நடிகர் சமுத்திரக்கனியும் கலந்து கொண்டார் என்பது கூடுதல் தகவல். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் சிங் தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தை கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். இதுபற்றி தயாரிப்பாளர்களில் ஒருவரான, பிருந்தா பிரசாத் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். ஆனால் கொரோனா அதற்கான வாய்ப்பை அளிக்கவில்லை. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இப்படத்திற்கு மதன் கார்கி பாடல் வரிகள் எழுதியுள்ளார்.