இதுவரை இல்லாத அளவிற்கு பல முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்த திரைப்படமாக தயாரானது பொன்னியின் செல்வன் திரைப்படம். சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நிழல்கள் ரவி, ஷோபிதா, லால், அஷ்வின் காக்கமனு, ஜெயசித்ரா, கிஷோர், அர்ஜுன் சிதம்பரம், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நீண்ட காலமாக கனவாக மட்டுமே இருந்த அமரர் கல்கி அவர்களின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை மிகுந்த சிரத்தை எடுத்து நிஜமாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். பிரமிப்பின் உச்சமாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 450 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

எழுத்தாளர் ஜெயமோகன் வசனங்கள் எழுத ரவிவர்மனின் ஒளிப்பதிவில் தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் ரசிகர்களை மிரள வைத்தது. இதனை அடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2வது பாகத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும் நிலையில், வருகிற ஏப்ரல் அல்லது ஆக்ஸ்ட் மாதம் பொன்னியின் செல்வன் 2 வெளியாகும் என சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் சமீபத்தில் நமது கலாட்டா பிளஸ் சேனலில், திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களின் WIDE ANGLE-ல் பிரத்யேக பேட்டி கொடுத்த தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதியை தெரிவித்தார். முன்னதாக பேட்டியில், “பாலிவுட் திரைப்படங்களைப் போல தமிழ் சினிமாவில் ரிலீஸ் தேதி ஏன் முன்பே அறிவிக்கப்படுவதில்லை?” என கேட்கப்பட்ட கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார்.

அதில், “பெரிய படங்களுக்கு முன்பே அறிவிக்கலாம் அந்த வகையில் பொன்னியின் செல்வன் 2 வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. அதை அறிவிக்க உள்ளோம்” என உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அந்த பிரத்தியேக பேட்டி இதோ…